வாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை

எந்நிலையிலும் என்றும் தமிழர்களால் மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெருங் கலைஞன் டி.எம்.எஸ். என்றழைக்கப்படும்  டி.எம் . சௌந்தராஜன் என்றால் மிகையில்லை. 1922 பங்குனி 24 ல் (இதே மார்ச் 24ம் தேதி) தமிழர்களின் காதுகளுக்கு தேன் வார்க்கப் பிறந்தவரே  குரலரசர் பாடகர் திலகம்

டி. எம் .எஸ் என்று தமிழர்கள் இனிமையாக அழைக்கும் ஒப்பாரும் மிக்காருமில்லா பாடகர்திலகம் டி . எம் . சௌந்தராஜன்.
கௌரவம்’ படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார்  சிவாஜிகணேசன். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை  ஓடவிட்டார் உதவி இயக்குநர். காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத் துவங்கினார். ஒருதடவையல்ல… இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக  பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி  படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து “சுந்தரா கொஞ்சம் டயம் கொடு…அப்புறம் சூட் பண்ணிக்கலாம்…”

எந்த பாடலையும் அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம்  “என்னண்ணே ஏதாவது பிரச்னையா…சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா…? என்றார் பதறியபடி. “இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தோடு பாடியிருக்கிறார். பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்.. இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என பிச்சு உதறி யிருக்கிறார்.

ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம் மெனக்கெட்டால்தான் நான் அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்… காட்சியும் எடுபடும்.
அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்” என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி.  உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம் குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர்தான்  டி.எம். சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ் கெளரவம் படத்தில் இடம்பெற்ற “ நீயும் நானுமா…  கண்ணா நீயும் நானுமா…” என்ற அந்த பாடலை யாரால் மறக்க முடியும்..

எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. தம் குரல் வளம், இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத மற்ற பாடகர்களிடமிருந்து டி.எம்.எஸ் முற்றிலும் மாறுபட்டார்.
திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல…அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.

உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்…ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில ஃபார்முலாவில் பாடி அசரடிக்கும் திறமைசாலியாக உலாவந்தவர் டி.எம்.எஸ்.

பாடல்களை பாடுகிறபோது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததுபோல் நில்லாமல் பாடலை மெருகேற்ற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வார் டி.எம்.எஸ். அதற்காக பாடலின் இசை அம்சங்களை தவிர்த்து பாடல்காட்சியின் சூழலையும் இயக்குநரிடம் கேட்டு தெரிந்துகொண்டு பாடுவது அவரது குணம். ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம்பெறும் ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ பாடல் நடுத்தர வயதைக் கடந்த கதாநாயகன் தன் பால்ய நினைவுகளை சுமந்தபடி தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து பாடுவதாக காட்சி. படத்தின் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குநர் காட்சியை சித்தரித்திருந்தார். அதைக்கேட்டுக்கொண்ட டி.எம்.எஸ் ரிக்கார்டிங் நடந்த அறையில் பாடலை பாடியபடி தேவைப்பட்ட நேரத்தில் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சிக்கு தக்கபடி டி.எம்.எஸ் குரல் தத்ரூபமாக பாடல் காட்சிக்கு பொருந்தி பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.

வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்,மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகனுக்காக அவர் பாடி இசையமைத்த பாடல்கள் சாகாவரம்பெற்றவை. திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி ‘சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு’ என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது.

தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.இனிய நட்பான இசையமைப்பாளர் நன்று என்று சொன்ன பின்பும் தனக்கு திருப்தி வரவில்லை என்றதால் மீண்டுமொருமுறை சந்தர்ப்பம் வேண்டி பாடிய பாடலே இன்றும் நாம் கேட்டு மகிழும் எழுசிப்பாடலான ” நான் ஆணையிட்டால் ” என்ற பாடலாகும்.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் தான் பாடி படமாக்கப்பட்ட பின்பு காட்சியை பார்த்துவிட்டு பொருந்தாது என்று மறுத்து அண்ணன் டி எம் எஸ் பாடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சிவாஜியின் வாயசைவுக்கு ஏற்ப திரையை பார்த்து பாடிய பாடல் ” பாலூட்டி வளர்த்தகிளி ” என்ற பாடல் என்று மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசைவிழாவொன்றில் டி .எம். எஸ் -ஸை புகழ்ந்தார்.

அப்படி வாயசைப்பை உள்வாங்கி உணர்வை கூட்டி பாடுவது மிகவும் நுணுக்கமான வேலை அதை ஒரு போட்டியாக எடுத்து சாதித்திருக்கின்றார் டி எம் எஸ் .. கலையுலகில் பெரும் புகழுக்குரியவர்களாக இருந்த சிலரில் டி எம் எஸ் பெயரும் என்றும் நினைக்கத்தக்கது போற்றத்தக்கது…