விஜய் சேதுபதி பெயரில் ஆன்லைன் கேப்மாரிகள்!

திரைப்படத் தொழில் செய்யும் தயாரிப்பாளர்தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்கிற திட்டமிடலும் இல்லாததும்தான்.

இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடாதது. அந்தந்த சமயத்தில் படங்கள் ஓட இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் ஏன்..? எதற்கு..? அதைச் செய்த படங்களெல்லாம் ஓடினவா..? என்ற எந்தக் கேள்வியுமில்லாமல் வட்டிக்கு வாங்கி பணத்தை வாரி வாரி ‘சினிமாவுக்குள்ளிருந்தே சினிமாவைக் காலி பண்ணும் சில கேப்மாரிகளி’டம் இழந்து நிற்பதுதான்.

இப்படி சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் காலி பண்ணுவதில் முக்கிய பங்காற்றுபவர்கள் படத் தொடக்கத்தில் ‘புரடக்‌ஷன் டிசைனர்களா’கவும், பட முடிவில் ‘புரமோட்டர்களா’கவும் இருக்கிறார்கள். இதுகணினி யுகம் அல்லவா..? அதனால், ‘ஆன்லைன் புரமோட்டர்கள்’ என்ற பெயரில் சமீபத்தில் சில கோஷ்டிகள் கிளம்பியிருக்கின்றன.
ஒரு திரைப்படம், திரையரங்குக்கு வந்து ஓடினால்தான் இலாபம் என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருந்தும்அது பற்றிய எந்த புரிதலும், சினிமா பற்றிய அடிப்படைஞானமும் இல்லாத இந்த வஞ்சகர்கள் வலையில் சிக்கி விடும் தயாரிப்பாளர்கள் இவர்களால் உடனடி நஷ்டத்தை பட வெளியீட்டுக்கு முன்பே அடைந்து விடுகிறார்கள்.

ஆன்லைன் விஷயத்தில் இரண்டு வகையான புரமோட்டர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு வகை ட்விட்டர் புரமோஷன். இவர்களின் வேலை முதலில் தன்னகத்தே ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்ஸ் இருப்பதாகக் காட்டிக்கொள்வது. அதைவைத்து படத்தை புரமோட் செய்கிறோம் பேர்வழி என்று கணிசமாக தயாரிப்பாளர்களிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு படம் என்னவாக எடுக்கப்பட்டிருந்தாலும் ‘ஆகா’, ‘ஓகோ’ என்று கூவிக்கூவி டிரென்டிங் ஏற்படுத்தி ‘கூலிக்கு மாரடிப்பது…’

இந்த புரமோட்டர்களையும் ‘ஜர்னலிஸ்ட்’ என்று திரைத்துறையினர் பலர் நம்பிக்கொண்டிருப்பது பெரும் சோகம்.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்…’ என்ற குறளின் வழி நின்று படத்தின் நிறை குறைகளை விமர்சிப்பவர்கள்தான் பத்திரிகையாளர்கள்… ஆங்கிலத்தில் ‘ஜர்னலிஸ்டுகள்…’ இப்படிக் கூலிக்கு மாரடிப்பவர்கள்’ அந்த வரிசையில் வர வாய்ப்பே இல்லாதவர்கள். இதுகூடப்

புரியாத தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இயக்குனர்கள் இவர்களிடம் ஏமாந்து போகிறார்கள்.

இரண்டாவது வகையான ஆன்லைன் புரமோட்டர்கள் இன்னும் ஆபத்தானவர்கள். இவர்களை ‘கேப்மாரிகள்’ என்றே சொல்லலாம். காரணம் ஆன்லைனில் ‘ஜர்னலிஸ்டுகளை’ வைத்து படத்தைப் புரமோட் செய்கிறோம் என்ற போர்வையில் ஐந்து முதல்30 லட்சம் வரைசேவைக் கட்டணமாக பெற்றுக்கொண்டு அத்தனை பணத்தையும் ஆட்டையைப் போடுவது.

இதற்கு அவர்கள் ஜர்னலிஸ்டுகளாக அடையாளம் காட்டுவது சில பல ட்விட்டர்காரர்களையும், சில டுபாக்கூர் இணையதளங்களையும்தான்.

மேற்படி ட்விட்டர் புரமோட்டர்களாவது அவரவர்கள் சொந்த கற்பனையைப் பயன்படுத்தி ஆளாளுக்கு வித்தியாசமாக அளந்து விடுவார்கள். இவர்கள் அப்படியல்ல… ஒரு கன்டென்ட் உருவாக்கி அதை வாந்தியெடுத்து தாங்கள் காட்டும் டிவிட்டர் கூலிகளை வைத்து அதை அப்படியே கட்டிங் பேஸ்டிங் செய்ய வைப்பார்கள்.

அச்சுத்தொழிலிருந்து ஒரு படி முன்னேறி டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில் இணையதளங்களாக மாறியவை மட்டுமே ஜர்னலிஸத்தில் வரும். இன்றைக்கு இருக்கும் முன்னணி பத்திரிகைகளான தினத்தந்தி, மாலைமலர், விகடன்,நக்கீரன், தமிழ் இந்து உள்ளிட்ட எல்லாருமே தங்களுக்கான இணையதளங்களை உருவாக்கி அதற்காக

படைப்பு ரீதியாககூடுதல் உழைப்பைச் செலுத்தி வருகின்றன.
மேற்படி பெரும் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களால் நிறுவப்பட்டிருக்கும் இணைய தளங்களும் இப்படி செய்திகளையும், விமர்சனங்களையும் அதனதன் தன்மைக்கேற்ப பத்திரிகை தர்மங்களுடன் வெளியிட்டு வருகின்றன.

ஆனால், இந்த புரமோட்டர்கள் கணக்கில் காட்டுவதெல்லாம் அவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கும் இணையங்கள். அதனால்தான் அவற்றை ‘டுபாக்கூர்’ என்கிறோம். ஒருவரே பல ‘டொமைன்களை’ வாங்கி உண்மையான பத்திரிகையாளர்கள் வெளியிடும் செய்தியை காபி பேஸ்ட் செய்து இயங்குபவை. இவர்களெல்லாம் புரமோட் பண்ணினால் ஒரு படம்ஓடி விடுமா

ஆனால், இவர்களை நம்பி அத்தனைத் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இயக்குனர்களும்

செம்மறியாட்டுக் கூட்டம் போல் இவர்களிடம் பல இலட்சங்களை இழந்து வருகிறார்கள். படம் ரிலீசானதும் தயாரிப்பாளர்கள்,
விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள்எல்லாம் தங்கள் முதலீடு கூட திரும்பி வராமல் நிற்க, இன்னும் கேட்டால் படத்துக்காக இரவு பகல் பாராமல் உழைத்த உதவியாளர்களிலிருந்து பி.ஆர்.ஓக்கள் வரை தங்களுக்கு வர வேண்டிய சம்பளம் வந்து சேராமலேயே போய்விடுகிறது.

இந்த கேப்மாரிகள் மட்டும் முதலிலேயே சுளையாக பணம் வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் பல ட்விட்டர் தளங்களும், இணைய தளங்களும் இவர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன.

பல புரமோட்டர்கள் தங்கள் மனைவி, மகள் என்று குடும்பத்திலிருக்கும் சகலரின் பேரிலும் இணையதளங்கள் வைத்து எல்லாவற்றுக்கும் பேமென்ட் போட்டுவிடுகிறார்கள். கணக்குக் காட்ட தங்கள் லிஸ்ட்டில் இருக்கும் இணையதளங்களிடம் “படம் ஓடவில்லை… வசூலாகவில்லை…

எங்கள் பணமே எங்களுக்கு வரவில்லை…” என்று சொல்லி அவர்களுக்கு நாமத்தைப் போட்டுவிட்டு மொத்த தொகையையும் ‘ஸ்வாகா’ செய்தும் விடுகிறார்கள்.

சமீபத்திய வெளியீடுகளில் ‘அசுரன்’, ‘கைதி’, ‘பிகில்’ தவிர எந்தப்படங்களையும் மக்கள் ரசிக்கவில்லை. அத்தனைப் படங்களும்தோல்விப்படங்கள்தான். தியேட்டருக்குள் பத்திலிருந்து முப்பது பேர் மட்டுமே பார்வையாளர்களாக இருந்திருக்கிறார்கள். சில படங்கள் பத்துப் பேருக்கும் குறைவாக இருந்து

தொடர்ந்துகாட்சி ரத்தானதால்
படத்தை தூக்கிவிட்டு வேறு படத்தை இரண்டாவது நாளே திரையிட்ட கதை இங்கு உண்டு.
இவர்களின் புரமோஷன்கள் கைகொடுத்திருந்தால் அத்தனைப் படங்களும் வெற்றிப்படங்களாகி இருக்க வேண்டுமே..? இந்த சிறிய நியாயமான உண்மையைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் “எங்களுக்கு சினிமாவை விட்டால் வேறு தொழில் தெரியாதே..?” என்கிறார்கள்.

ஆன்லைன் புரமோஷனில் இப்படி சமீபத்தில் கொடிகட்டிப் பறக்கிறது சிடிசி என்ற புரமோஷனல் குரூப். சமீபத்தில் பல படங்களுக்கு இவர்கள் புரமோட் செய்தவகையில் சில கோடிகளையே பார்த்தவர்கள். ஆனால், இவர்கள் புரமோட் செய்த ஒரு படமும் ஓடவில்லை என்பது புள்ளிவிவரம்.

அண்மையில் வெளியான ‘இருட்டு’ படம் இவர்களால் புரமோட் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அரங்கு நிறையவில்லை என்பதுதான் நெட் ரிசல்ட். இன்னும் கேட்டால் இப்படி ஒரு படம் வெளியானதே மக்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், இவர்கள் உருவாக்கிய போஸ்டர்களில் அத்தனை (டுபாக்கூர் மற்றும் பினாமி) இணையதளங்களும் படத்தைப் பாராட்டி ஸ்டார் ஸ்டாராகக் கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் படம் பத்திரிகையாளர் காட்சியே போடவில்லை.

இந்த வாரம் வெளியாகும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சியின் ‘கேப்மாரி’ படமும் இவர்கள் கையில் சிக்கியுள்ளது. பத்திரிகையாளர்களிடம் உரிமையுடன் நட்பு பாராட்டும் அனுபவம் வாய்ந்த எஸ்ஏசி போன்றவர்களே கேட்பார் பேச்சைக் கேட்டு இப்படிச் சிக்கி விட்டது பரிதாபம். இந்தப்படத்துக்காக இவர்கள் வாங்கிய தொகை ஆறு லட்சம் என்று தெரிகிறது. அதில் பாதியைக்கூட செலவழிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

பல மாதங்களுக்கு முன் இப்படித்தான் ஒரு பெண் ஆன்லைன் புரமோட்டர் பல இலட்ச மோசடி புகாரில் சிக்கினார்.
அந்த வரிசையில் இப்போது இவர்கள் சேருகிறார்கள். பண மோசடி மட்டுமின்றி, நடிகர் விஜய்சேதுபதிக்கும் இவர்களுக்கும் உள்ள நட்பைத் தவறாகப் பயன்படுத்தி, பல தயாரிப்பாளர்களிடம் விஜய்சேதுபதிக்கு நாங்கள்தான் எல்லாம் என்று சொல்வதோடு அவரிடம் தேதி வாங்கித்தருகிறேன் என்று சொல்லிவருவதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே இவர்களிடம் தயாரிப்பாளர்களும் விஜய்சேதுபதியும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.