ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன்.பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்
ஒரு சின்ன விசயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு. தந்தையாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும், தாயாக சரண்யா பொன்வண்ணனும், தாய்மாமனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.
எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ஜி ராமசாமியாக சத்யராஜ் மற்றும் அன்பளிப்பு ரவி எனும் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார்கள்.தனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஆரிடம் வரும் அனுப்பிரியா (மிருணாளினி ரவி) தந்தை-மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது சுவாரசியமாகக் காட்டப்பட்டுள்ளது என்கிறது இயக்குநர் வட்டாரம்
படம் முழுவதும் அரை டவுசரில் வரும் அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.இந்தப்படம் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என்று சொல்லியிருந்தார்கள். ஏப்ரலில் கொரொனாஊரடங்குதொடங்கியதால் படம் வெளியாகவில்லை.
மீண்டும் இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பும் இப்பட வெளியீடு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லை.
அதற்குக் காரணம், இந்தப்படத்தை நேரடியாகஓடிடியில்வெளியிட இருப்பதுதான் என்கிறார்கள்.
ஹாட் ஸ்டார் இணைய நேரடி ஒளிபரப்பு மற்றும் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு என இரண்டு உரிமைகளுக்கும் சேர்த்து 13 கோடி ரூபாய் விலைபேசி முடித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன
திரையரங்குகளில் எம்ஜிஆர் மகன்படம் வெளியானால் 30 கோடி ரூபாய் டிக்கட் விற்பனை மூலம் வசூல் ஆனால் மட்டுமே 13 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு பங்கு தொகையாக கிடைக்கும் தற்போதைய சூழலில் அவ்வளவு வசூல் செய்யாது என்பதாலேயே இப்படத்தை விற்றுவிட்டனர் என்று சொல்கிறார்கள்