முடிவுக்கு வந்த அவன் இவன் வழக்கு

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன் ஆர்யா, விஷால் அம்பிகா ஜனனி அய்யர், மது ஜாலினி C.V.குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து ஐயனார் கோயில் பற்றியும் அவதூறாகச் சித்திரித்து இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிங்கம்பட்டி ஜமீன், மறைந்த முருகதாஸ் தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜென் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலா ஆகியோர் மீது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜரானார்கள். இதனிடையே, இருவரும் தங்கள் மீதான வழக்கை தனித்தனியே விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தனியாகப் பிரித்து நடத்தப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் மார்ச் மாதம் ஆஜரான நடிகர் ஆர்யா தரப்பில் திரைப்படத்தில் அவதூறான கருத்து இருந்தது தொடர்பாக வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மீதான வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இயக்குநர் பாலா மீதான வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்துவந்தது.அந்த வழக்கின் தீர்ப்பு 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அன்றைய தினம் பாலா நேரில் ஆஜராஜ வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்று பாலா ஆஜராகாததால் தீர்ப்பு மறுநாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இயக்குநர் பாலா 18 ஆம் தேதியும் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்று(19.08.2021) தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் இயக்குநர் பாலா நேரில் ஆஜராகியிருந்தார். தீர்ப்பை வாசித்த நீதிபதி கார்த்திகேயன், “இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கில் இருந்து இயக்குநர் பாலாவை விடுவிக்கிறேன்” என அறிவித்தார்.

இது குறித்துப் பேசிய பாலா வழக்கறிஞர் முகமது உசேன், இந்த அவதூறு வழக்கு தொடர்பாக நாங்கள் எடுத்துவைத்த வாதங்களை நீதிபதி ஏற்றுக் கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பை அளித்துள்ளார்” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் நீதிமன்ற ஆவணங்களைப் பெற்று கலந்தாலோசனை செய்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.