கொரோனா ஊரடங்குக்குப் பிறகு சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் தமிழ்த்திரையுலகிலும் இங்கும் அப்படி நடக்குமோ? என்கிற கவலை வந்தது.
ஆனால், அங்கு வரவேற்பில்லாமல் போனதற்குக் காரணம் புதிய படங்கள் வெளியாகததுதான் என்று சொல்லப்படுகிறது.அதேநேரம் இப்போது நடக்கும் நிகழ்வு தமிழ்த்திரையுலகுக்குத் தெம்பூட்டியிருக்கிறது.
அது…
லெகஸி ஆஃப் லைஸ் எனும் ஆங்கிலப்படம் ஜூலை 29 அன்று வெளியாகவுள்ளது. இந்தப்படத்தை, விஜய் நடித்த மாஸ்டர் படத்தை மலேசியாவில் வெளியிடவுள்ள மாலிக் நிறுவனம் தான் வெளியிடவுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டவுடன் அதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு திரையுலகினருக்குப் புத்துணர்ச்சி ஊட்டியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளார் கலைப்புலிதாணு வெளியிட்டுள்ள வாழ்த்தில், ஹாலிவுட் திரைப்படத்தை மலேசியாவில் முதன்முறையாக வெளியிடும் மாலிக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 29 ஜூலை அன்று வெளியாகும் #LegacyofLies திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று அவருக்கு மேலும் பல சிறப்புகளைச் சேர்க்கும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகிய லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளீயிட்டுள்ள வாழ்த்தில், மிகப்பெரிய நற்செய்தி, மலேசியாவில் திரையரங்குகள் திரும்பத் திறக்கப்படுகின்றன.எங்கள் மாஸ்டர் திரைப்படத்தின் எஃப் எம் எஸ் விநியோகஸ்தர் மாலிக்,ஹாலிவுட் படத்தை வெளீயிடுகிறார். முதன்முறை ஹாலிவிட் படத்தை வெளியிடும் அவருக்கு வாழ்த்துகள்
இவ்வாறு அந்நிறுவனம் கூறியுள்ளது.