மூடப்பட்ட திரையரங்குகள் – நிஜமாகாத கனவு

திரையரங்குகளில் வெற்றிகரமான 100ஆவது நாள் விளம்பரங்கள் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் அரிதான ஒன்றாக மாறி வருகிறது.

சில படங்களின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தங்கள் கௌரவத்திற்காக வசூல் இல்லை என்றாலும் 100ஆவது நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக திரையரங்குகளுக்கு வாடகை கட்டி தங்களது படங்களை ஓட்டுவது தமிழ் சினிமாவில் சர்வ சாதாரணமாகி விட்டது.

இப்படிப்பட்ட எந்த சிரமமும் இன்றி கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இன்று நூறு நாட்கள் நிறைவு பெறுவதை தமிழ் திரையுலகம் வருத்தத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. திரையரங்குகள் அரசாங்கம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இவர்கள் மூலம் எத்தனையோ சோதனைகளை எதிர் கொண்டு, கடந்து கம்பீரமாக இயங்கி கொண்டிருந்ததற்கு காரணம் தமிழகத்தில் உள்ள 70% ஒற்றை திரையரங்குகள்.

கௌரவம், ஊர் பெருமைகளுக்காக கட்டப்பட்டவை அவை. தமிழ் சினிமாவில் வேலை நிறுத்தங்கள் பல முறை நடைபெற்று இருக்கிறது. அவையெல்லாம் 50 நாட்களை கடந்து போனதில்லை. ஆனால் இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் 2020 மார்ச் 17 அன்று திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் நூறு நாட்கள் நிறைவடைகிறது.

அடைமழை நின்று எப்போது கிழக்கு வானம் சிவக்கும் என விவசாயி காத்திருப்பதைப் போல கொரானோ எப்போது முடிவுக்கு வரும் திரையரங்குகளை திறக்கலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் அரசின் தளர்வு அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.

கடந்து போன நூறு நாட்களில் 1100 தமிழக திரையரங்கு களில் பணிபுரிந்த சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். திரையரங்குகளுக்கு வருகின்ற பார்வையாளர்களை நம்பி சிறு கடை நடத்தி வந்தவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்து போனது.

சினிமா தியேட்டர் தொழிலில் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் வருவாய் அதிகரிக்கக் கூடிய மாதங்களாகும். இந்த வருடம் ஏப்ரல் மாதம் விஜய் நடித்துள்ள மாஸ்டர், அதனை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’, தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’, ஜெயம்ரவி நடித்துள்ள ‘பூமி’ என நான்கு முக்கியமான படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

இவற்றுடன் சிறு பட்ஜெட் படங்கள் சுமார் 35 படங்கள் வெளியாகி இருக்கும். திரையரங்குகள் மூலம் வருடத்திற்கு சுமார் 2000 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் நடைபெற்று வந்தது .கடந்த நூறு நாட்களில் டிக்கெட் விற்பனை, கேண்டீன், பார்க்கிங் மூலமாக திரையரங்குகளில் சுமார் 450 கோடி ரூபாய் வருவாய் நடக்க வேண்டியது. இது நடைபெறாததால் வருவாய் இழப்பை திரையரங்குகள் கடந்து வந்திருக்கிறது.

திரையரங்குகள் கடந்த 100 நாட்களாக மூடப்பட்டிருப்பதால் எதிர்காலத்தில் படத்தயாரிப்பு, நடிகர்கள் கால்ஷீட், பட வெளியீடு என அனைத்தும் கடும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.