டிரண்டிங் ஜாப்!

இன்ஜினீயரிங் படிச்சா இனி வேலை இல்லை என்பது மாதிரியான ஒரு பிம்பம் நம் சமூகத்தில் பரவி வருகிறது. இது நல்லதா? கெட்டதா என்பதைக் கடந்து பொறியியல் படிப்பு படித்த பட்டதாரிகள் 43 சதவீதத்தினர் வேலையின்றி இருப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அப்படியானால் வேலை என்பது இல்லையா? என்று கேட்டால் வேலை எக்கச்சக்கமாக இருக்கிறது. ஆனால், அதை செய்வதற்கு சரியான திறனுடைய நபர்கள் நம் மாநிலத்தில் குறைச்சலாகவே இருக்கின்றனர்.
ஒருபுறத்தில் பார்த்தால் வேலையில்லா திண்டாட்டம். இன்னொருபுறம் பார்த்தால், சரியான வேலையாட்கள் இல்லாமல் நிறுவனங்கள் திண்டாட்டம். என்னதான் நடக்கிறது நம் சமூகத்தில்?
“ரோடு போடுற வேலைக்குப் பார்த்தா முந்தி 100 பேர் வேலை பார்ப்பாங்க… ஆனா, இப்போ பாதிபேருக்கும் குறைச்சலாவே வேலை பார்க்கிறாங்க… எங்க பார்த்தாலும் மிஷின் வந்திருச்சு. மனுஷன் பார்க்கிற வேலையெல்லாம் இப்போ மிஷின் பார்க்க ஆரம்பிச்சிருச்சு… அப்போ, மனுஷங்களுக்கு எங்கிருந்து வேலை கிடைக்கும்” என்ற குரல் மிக மிக நியாயமானது. சம நிலைத்தன்மை என்பது எல்லா இடத்திலும், எல்லா துறையிலும் இருக்கவே செய்கிறது. இந்த பூமியும், இந்த பிரபஞ்சமும் சம நிலைத்தன்மை என்ற கோட்பாட்டினால் மட்டுமே இயங்கிவருகிறது. இந்த கோட்பாடுதான் வேலைவாய்ப்பிலும் இருக்கிறது. ஆனால் நாம் யாரும் இதை உணர்ந்துகொள்ள தயாராய் இல்லை. அதென்ன சம நிலைக் கோட்பாடு. அதாவது ஒரு பொருளின் தேவை குறைய குறைய இன்னொன்றின் தேவை அதிகரித்துக்கொண்டேயிருக்கும். இதுதான் சம நிலைக் கோட்பாடு. முழுமையாக எதுவும் இல்லை என்று இங்கு எதுவுமே இல்லை. புதிது புதிதாய் ஏதோ ஒன்று உருவாகிக்கொண்டேயிருக்கும். அதுதான் சம நிலைக் கோட்பாடு.
அந்த வகையில் ஒரு பிரிவினருக்கு வேலையே இல்லை என்ற நிலை வரும்போது, எங்கோ ஒரு பிரிவில் அதிகபட்சமாய் வேலைவாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது என்றே அர்த்தம். இல்லை என்று ஒதுங்கி நின்று வருத்தப்பட்டு நிற்காமல், அடுத்தது என்ன தேடுவதே புத்திசாலித்தனம்.
அந்த வகையில் இப்போது ட்ரெண்டிங் ஜாப்தான் நகரங்களில் கிராக்கியாகி வருகிறது.
அதென்ன ட்ரெண்ட்டிங் ஜாப். காலத்திற்கேற்ற வேலையைத்தான் ட்ரெண்ட்டிங் ஜாப் என்பார்கள். நம் வீட்டில் முருங்கைக்காய் இருந்தால் என்ன செய்வோம்.
வாய்ப்பு 1:
ஒன்று பக்கத்து வீட்டில் கொடுத்து உறவுமுறையை வளர்த்துக்கொள்வோம்.
வாய்ப்பு 2:
முருங்கைக்காய்களை வீட்டு வாசலில் வரிசையாய் அடுக்கி வைத்துவிட்டு நாமே வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிடுவோம். இதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்.
வாய்ப்பு 3:
முருங்கைக்காய்களை நேரடியாக கடையில் கொடுத்து, கடைக்காரர் கொடுக்கும் காசை வாங்கிங்கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவது.
வாய்ப்பு 4:
முருங்கைக்காயில் இருக்கும் சத்துகளை வகைப்படுத்த வேண்டும். அந்த சத்துக்களில் இருக்கும் நன்மை தீமைகளை பட்டியலிட வேண்டும். முருங்கைக்காய் விளையும் உங்கள் வீட்டின் மண் எத்தகைய சிறப்பைப் பெற்றது என்பதை விவரிக்க வேண்டும் இதையெல்லாம் ஒரு வீடியோவாக உருவாக்கி, இத்தகைய வல்லமை வாய்ந்த முருங்கைக்காய் என்னிடம் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்வதுதான் 4 வது வாய்ப்பு.
இந்த 4 வது வாய்ப்பில் இருக்கும் நன்மைகள் ஏராளம் ஏராளம்.

1. உங்களின் முகம் பலருக்கும் தெரியப்போவதால் நீங்கள் பிரபலமாவீர்கள்.

2. சாதாரண முருங்கைக்காயில் இருக்கும் நன்மை தீமைகளை மக்களுக்கு நீங்கள் தயங்காமல் எடுத்துச் சொல்வதால், நீங்கள் ஒரு சமூக சிந்தனையாளர் ஆகிவிடுவீர்கள்.

3. இந்த இரண்டையும் காரணமாய் வைத்து 1 ரூபாய் விற்கும் முருங்கைக்காயை 10 ரூபாய்க்கு அழகாய் விற்கலாம்.
இந்த 4வது வாய்ப்புதான் இங்கு பெருகியிருக்கிறது. ஒரு வாய்ப்பு முழுமையாக இல்லாமல் போனால், இன்னொரு வாய்ப்பு புதிதாய் உருவாகும் என்று சொன்னேனே… அந்த புதிய வாய்ப்புதான் இது.
படிப்பு என்பது அறிவையும், சிந்தனைத்திறனையும் வளர்த்துக்கொள்வதற்கான கருவி தானே தவிர, வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் துருப்புச் சீட்டல்ல. இதை நீங்கள் புரிந்துகொண்டால், கையருகே கிடக்கும் வாய்ப்புகள் உங்கள் கண்களுக்கு புலப்பட்டுவிடும்.
இங்கு புத்தம் புதிய சிந்தனைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், அந்த சிந்தனைகளை எப்படி சந்தைப்படுத்தப் போகிறீர்கள் என்பதே இங்கு சவால். அதை மட்டும் புரிந்துகொண்டுவிட்டால் வீட்டிலிருந்து நீங்கள் மில்லியனர் ஆகலாம். ட்ரெண்டிங் ஜாப்பின் ஸ்பெஷாலிட்டியே அதுதான்.
வீட்டிலிருந்து, உங்கள் அறைக்குள் இருந்து உங்களுடைய சிந்தனையை மட்டும் முதலீடாக வைத்து மாதம் ரூ. 20 லட்சம் சம்பாதிக்கலாம்.
மாசம் 20 லட்சமெல்லாம் வேண்டாங்க… மாசம் ஒரு 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வழியைச் சொல்லுங்கன்னு நீங்க கேட்க ஆரம்பிச்சா, நீங்க ட்ரெண்ட்டிங் ஜாப்புக்கான அடிப்படைத் தகுதியைக் கூட இழந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்.
இல்லாததை இருப்பதுபோல் காட்டுவது, இருப்பதை எங்குமே இல்லாத்துபோல் வர்ணிப்பது போன்ற காரணிகள்தான் ட்ரெண்ட்டிங் ஜாப்பின் அடி நாதம்.