வாபகண்டையா ஆடியோ வெளியீடு தொகுப்பு

உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்,வாபகண்டையா.இந்தப்படத்துக்குக் கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார்.புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் நாயகனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப்படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் வில்லனாக நடிக்கிறார்.இவர்களோடு ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ நிதிஷ் வீரா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், மனோபாலா, ‘காதல்’ சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கதை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பகண்டையா என்ற கிராமத்தில் நடப்பதுபோல் அமைந்துள்ளதாம்.
இந்தப் படத்துக்கு இசை எஸ்.ஏ.ராஜ்குமார். அவருடைய இசையில் மறைந்த எஸ்.பி.பி. பாடிய பாடல் இடம்பெற்ற கடைசித் திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ள இந்தப் படத்துக்கு, ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர்,
அக்‌ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 17.2.2021 அன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
விழாவில் நாயகன், நாயகி, வில்லன்,இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி ராமசாமி, ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் விக்ரமன், இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் தினா, ‘ஸ்டண்ட் யூனியன்’ தலைவர் தவசி ராஜ், பி.ஆர்.ஓ. சங்கத் தலைவர் விஜயமுரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநரும், ‘பெப்சி’ அமைப்பின் தலைவருமான ஆர்.கே. செல்வமணி பேசும்போது,
முப்பது வருஷத்துக்கு முன்னே நான் இயக்கிய ‘புலன் விசாரணை’ படம் ரிலீஸானப்போ என்னால தியேட்டருக்குள்ளே போக முடியலை. அப்படியொரு கூட்டம். அந்தளவு கூட்டத்தை இன்னைக்கு இந்த விழாவுல பார்க்க முடியுது. எப்படி புலன் விசாரணை 100 நாள் ஓடி வெற்றி பெற்றுச்சோ அப்படி இந்த படமும் பெரியளவுல வெற்றி பெறணும்னு வாழ்த்தறேன். புலன் விசாரணையில எப்படி விஜய்காந்தோ அதே பழைய விஜய்காந்த் மாதிரி இந்த படத்தோட ஹீரோ தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருக்கார். ஒரு தமிழ்ப் பொண்ணை ஹீரோயினா அறிமுகப்படுத்திருக்காங்க. அதையெல்லாம் வெச்சுப் பார்க்கிறப்போ நல்ல தமிழ்ப் படமா வந்திருக்கும்கிற நம்பிக்கை வருது.

டிரெய்லர் பார்க்கிறப்போ, படம் சமூக அக்கறையை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்குன்னு புரிஞ்ச்சுக்க முடிஞ்சுது. இனத்தால, மதத்தால நாட்டை துண்டாடுறவங்களுக்கு எதிரான வசனமும் இருக்கு. அது எல்லாமே சரியானதுதான். அந்த வகையில இயக்குநர் நல்ல படத்தை எடுத்திருக்கார் என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

என்னோட படங்களுக்கு ஊர் பெயர்களைத்தான் தலைப்பா வைப்பேன். அதே மாதிரி இந்த படத்தோட இயக்குநர் அவரோட பகண்டையா’ங்ககிற ஊர்ப் பெயரை தலைப்பா வெச்சிருக்கார்.
இயக்குநருக்கு ஊர்ப்பற்று மட்டுமில்லை; தேசப்பற்றும் இருக்கு. அதனாலதான், நாட்டுல இன உணர்வைத் தூண்டி, மத உணர்வைத் தூண்டி ஆதாயம் பார்க்க, அரசியல் பண்ண நினைக்கிறவங்களை செருப்பால அடிக்கிற மாதிரி வசனம் வெச்சிருக்கார். யாருக்கு ஊர்ப்பற்றும் தேசப்பற்றும் இருக்கோ அவங்க நல்ல கலைஞன். அவங்கதான் உண்மையான மனிதன். அப்படி பார்க்கிறப்போ இந்தப்படத்தோட இயக்குநரை உண்மையான மனிதன்னு சொல்லலாம்.டிரெய்லர் பார்த்தப்போ ‘சாதிங்கிறது மாம்பழக் கொட்டைக்குள்ள இருக்கிற வண்டு மாதிரி’ன்னு ஒரு வசனம் வந்துச்சு. மாம்பழத்தை ஏன் இழுத்திருக்கார்னு படத்தைப்பார்த்தாதான் புரியும். பார்க்கணும்.அடுத்ததா, படத்தோட ஹீரோ பேரு விஜய தினேஷாம். விஜய்ன்னாலே வெற்றிதான். ஹீரோவை பார்த்து ஆர்.கே. செல்வமணி, விஜய்காந்தை பார்த்த மாதிரி இருக்குன்னார். விஜய்காந்தை மட்டுமில்லை; விஜய்ய பார்த்த மாதிரியும் இருக்கார்
என்று படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கும்படி பாராட்டினார்.

இயக்குநர் விக்ரமன் பேசும்போது,
என்னோட பல படங்களுக்கு இசையமைச்ச நண்பர் எஸ்.ஏ.ராஜ்குமார் இந்தப்படத்துக்கு இசையமைச்சிருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு.சமூக அக்கறையை மையமா வெச்சு உருவாகியிருக்கிற இந்தப்படத்தோட ஒரு பாட்டுல ‘தமிழர்களோட சினத்தால் தனி ஈழம் உருவெடுக்கும்’கிற மாதிரி ஒரு வரி வருது. இயக்குநரோட அந்தக்கனவு நனவாகணும். அதுதான் நம் எல்லோருடைய விருப்பமும் ஆசையும்கூடஎன பெருமிதப்பட்டார்.

இசையமைப்பாளர் தினா பேசும்போது,

இந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டிருக்கிற, இயக்குநரோட சொந்த ஊரான விழுப்புரத்துல இருந்து வந்திருக்கிற ரசிகர்களோட உற்சாகத்தைப் பார்த்தா படம் விழுப்புரத்துல 175 நாள் ஓடி வெள்ளிவிழா காணும்கிறது உறுதியா தெரியுது. அங்கே மட்டுமில்லாம் எல்லா இடத்துலயும் படம் பெருசா ஓட ரசிகர்கள் ஆதரவு தரணும் என்றார்.