வெற்றிமாறன் இயக்கும்வாடிவாசல்

சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் புதிய படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துவருகிறார்.

சூர்யாவின் நடிப்பில் நாற்பதாவது படமாக உருவாகிவரும் இந்தப் படம் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிறது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படமும் கலைப்புலி எஸ்.தாணு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருந்தது. பெரும் பாராட்டுகளையும் வசூலையும் அசுரன் திரைப்படம் பெற்றது. இதனால் சூர்யா நடிக்கும் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது.

படத்தின் பெயர், கதாநாயகி உள்ளிட்ட விவரங்களைப் பெற ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தப் படத்துக்கு “வாடிவாசல்” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி படம் இருக்கலாம் என்றும், கிராமத்து இளைஞராக சூர்யாவைப் பார்க்கலாம் என்றும் படத்தில் டைட்டிலை வைத்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தகவல் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை அளித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.