சாய் பல்லவியை இயக்கும் வெற்றி மாறன்

அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி திரைப்படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளார்.

ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. சர்வதேச அளவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்பிளிக்ஸ், தங்கள் தளத்தில் வளர்ந்து வரும் தமிழ் ரசிகர்களைக் குறி வைத்துப் புதிய திரைப்படங்கள் எடுக்கத் தயாராகி வருகிறது.

அந்த வகையில், தற்போது தமிழில், கவுதம் மேனன், வெற்றி மாறன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா உள்ளிட்ட நான்கு இயக்குநர்களை வைத்து ஆந்தாலஜி படம் எடுக்கவுள்ளது நெட்பிளிக்ஸ்.

சமீபத்தில் வெளியான வெற்றி மாறனின் அசுரன் திரைப்படம் சாதி ரீதியான அடக்குமுறைக்கு எதிரான களத்துடன் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.

 தற்போது நான்கு இயக்குநர்கள் இணைந்துள்ள இந்த ஆந்தாலஜி படத்தின் மையக் கரு கெளரவக் கொலைகளாகும். அசுரன் படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படைப்பையும் அதே போன்ற கனமான கதைக்களத்தோடு வெற்றி மாறன் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள குறும்படத்தில் பிரகாஷ் ராஜ் நாயகனாகவும், சாய் பல்லவி நாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள்

மாரி 2, என்.ஜி.கே படங்களை தொடர்ந்து சாய் பல்லவி மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி, பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படங்களின் படப்பிடிப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

குறும்படங்களின் தொகுப்பே ஆந்தாலஜி திரைப்படம். இதை ஒரே இயக்குநரோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குநர்களோ இயக்குவார்கள்.
ஒரே மையக்கருவை எடுத்துக் கொண்டு நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியாகும் ஆந்தாலஜி திரைப்படங்கள் நெட்பிளிக்ஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், கரண் ஜோஹர், திபாகர் பானர்ஜீ இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’, ஹாலிவுட்டின் இரட்டை இயக்குநர்களான ஈதன் காயின், ஜோயல் காயின் ஆகியோர் இயக்கத்தில் வெளியான ’தி பேலட் ஆஃப் பஸ்டர் ஸ்குரூக்ஸ்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அதே போல, தமிழில் உருவாகும் ஆந்தாலஜி படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.