72 மணிநேரம் காத்திருக்க சொன்ன விஜய்

மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் நெய்வேலி சுரங்கப் பகுதியில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. வருமான வரித் துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட அடுத்த நாள் யாரும் எதிர்பாரா வண்ணம் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் அங்கு பா.ஜ.க சார்பில் வந்த போராட்டக்காரர்களை எதிர்பார்க்கவில்லை. என்ன ஆனாலும் ஷூட்டிங்கை நிறுத்தவேண்டாம் என்று கூறி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திய மாஸ்டர் படக்குழு, நேற்று(07.02.2020) மாலை ஸ்பாட்டுக்கு வெளியே திரண்ட ரசிகர்களால் ஸ்தம்பித்துப் போனது.

தொடர் பிரச்சினைகளின் பிறகு ஷூட்டிங்கில் கலந்துகொண்டதால் ஆர்வத்தில் வந்திருக்கிறார்களென நினைத்து வெளியே வந்து கைகாட்டிவிட்டுச் சென்றார் விஜய். ஆனால், அடுத்த நாளான இன்றும் ரசிகர்கள் ஸ்பாட்டுக்கு வெளியில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

முக்கியமாக, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வண்டிகளை ஏற்பாடு செய்துகொண்டு நெய்வேலியிலுள்ள இரண்டாம் எண் சுரங்கத்துக்கு வெளியில் வந்து காத்திருந்த ரசிகர்கள், அங்கிருந்த வாகனங்கள் மற்றும் உயர்ந்த இடங்களின் மீது ஏறி விஜய்யைப் பார்க்கக் காத்திருந்தனர்.

அவர்களுடன் பெண்களும் வந்திருந்ததால் அதிரடிப் படையினர் பாதுகாப்புக்கு பெருமளவில் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், மாலையில் சூரியன் மறைந்ததும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் வெளியே வந்த விஜய்க்கு, அதிகளவில் ரசிகர்கள் காத்திருப்பதாக சொல்லப்பட்டது.
நேற்று போலவே கையசைத்துவிட்டு செல்வோம் என வெளியே வந்த விஜய் ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுவிட்டார். அவரைப்போலவே விஜய்யைப் பார்த்ததும் ரசிகர்களும் பரவசமடைந்து சுரங்கத்தின் வாசல் கேட்டினையும், வேலியையும் மீறி உள்ளே செல்ல முற்பட்டனர்.
இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்குப் பிறகு, அங்கு நிற்கவைக்கப்பட்டிருந்த அதிரடிப் படையினர் விஜய் ரசிகர்களின் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அதன்பிறகு விஜய்யின் கார் வெளியில் சென்றது.

இந்த சம்பவம் நடந்துமுடிந்த சில நிமிடங்களில் மாஸ்டர் படக்குழுவினரை அணுகிய சுரங்க அதிகாரிகள் “ஷூட்டிங் நடத்த மட்டுமே அனுமதி கொடுத்தோம். அதிலும், இத்தனை பேருக்கு மேலாக உள்ளே வரவோ அதிகளவில் வாகனங்கள் நிறுத்தவோ அனுமதியில்லை என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், இப்போது கூடும் கூட்டத்தால் இங்கு பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் சரிசெய்யாவிட்டால் ஷூட்டிங் அனுமதியை நீக்கவேண்டியதிருக்கும்” என எச்சரித்திருக்கின்றனர். இதனையடுத்து இந்தத் தகவல் விஜய்க்கும் சொல்லப்பட்டிருக்கிறது.
 “மூன்று நாட்கள் ஷூட்டிங் மட்டுமே மீதியிருக்கிறது. நாளை என்ன நடக்கிறதெனப் பார்ப்போம். இது இப்படியே தொடர்ந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டை மாற்றிவிடுவோம். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொள்ளுங்கள். ஆனால், இங்கு ஷூட்டிங்கை நடத்திமுடிப்பதற்கு முயற்சிப்போம்” என்று கூறியிருக்கிறார் என்கின்றனர் படக்குழுவினர்.