ஈஸ்வரன் சிலம்பரசனுக்கு ஏன் இந்த வீம்பு, வம்பு

எந்திரமயமான மனிதர்களின்அன்றாட வாழ்க்கையில் சற்று நின்று தங்களைஆசுவாசப்படுத்திக்

கொள்ளஏதுவாக பண்டிகைகள் உள்ளன. அந்தப் பண்டிகைகளைக் சிறப்பு வாய்ந்ததாக மாற்றுவதில் பொங்கல் அன்று வெளியாகும் புதிய படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆட்டம், பாட்டம், விசில் சத்தங்களுடன் கூடிய தியேட்டர் கொண்டாட்டம் இல்லாமல் பலருக்கும் பண்டிகைகள் முழுமையடைவதில்லை.
இருபது வருடங்களுக்கு முன்னர் ஐந்து முதல் ஏழு படங்கள் வரை பண்டிகை நாளில் வெளியாகி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுசிறிய நடிகர் படம், பெரிய நடிகர் படம், பட்ஜெட் குறைவான படம் என்றெல்லாம் பாரபட்சம் இருந்ததில்லை. தற்போதைய காலகட்டங்களில் பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்டத்திற்கான தளங்கள் விரிவடைந்து வருவதால் தியேட்டர்களில் பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன. அவ்வப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. முன்னணி நடிகர்கள் தங்களுக்குள் உள்ள தொழில்முறை போட்டியைத் தக்க வைக்கவே பண்டிகை நாட்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றன.
வீரம்-ஜில்லா, வேதாளம் – தூங்காவனம், விஸ்வாசம் – பேட்ட ஆகியவற்றைஉதாரணமாகக் குறிப்பிடலாம். கொரோனா நெருக்கடிநிலை தளர்வுக்குப் பிறகு, வெறிச்சோடிக் கிடந்த திரையரங்குகள் அனைத்தும் புத்துயிர் பெற, எதிர்வரவிருக்கும் பொங்கல் தினத்தையே வெகுவாக நம்பியுள்ளன. இவ்வருட பொங்கல் தினத்தைக் குறி வைத்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர்,சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன்திரைப்படங்கள் வெளியாகின்றனஇரு படங்களுக்குமான எதிர்பார்ப்புகளும் உச்சத்தில் உள்ளன. இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தின் ட்ரைலர்  (08/01/2021) வெளியானது. அதில் இடம் பெற்றிருந்த ‘நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா… நான் காப்பதற்காக வந்த ஈஸ்வரன்டா’ என்ற சிம்பு பேசும் வசனம் சமூக வலைதளங்களில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த வசனத்தின் மூலம் சிம்பு, நடிகர் தனுஷை மறைமுகமாக உரசுகிறாரா? இதுபோன்ற மறைமுக உரசல்கள் தமிழ் சினிமாவில் புதியதா? சற்று பின்னோக்கி பார்ப்போம்.இரு போட்டி நடிகர்கள் ஒரே காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முகங்களாக இருப்பது எம்.கே.தியாகராஜபாகவதர் – பி.யூ. சின்னப்பா காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. பின்னாட்களில் அது எம்.ஜி.ராமச்சந்திரன் – சிவாஜி கணேசன்என்றானது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்சினிமாவில் தொடங்கிய ‘பன்ச்’ டயலாக் கலாச்சாரம், போட்டி மனப்பான்மையை ரசிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது. மக்களுக்கு தான் சொல்ல வேண்டும் என நினைத்த கருத்துகள் அனைத்தையுமே பன்ச் டயலாக் வழியாகக் கடத்துவது எம்.ஜி.ஆர் வழக்கம். பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி முகங்களாக ரஜினி – கமல் மாறியபோதுஇந்த பன்ச் டயலாக் கலாச்சாரம் வேறு வடிவம் கண்டாலும், ஒருவரை ஒருவர் மறைமுகமாக உரசிக்கொள்ளும் நிலைக்குச் செல்லவில்லை. ‘எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன், நண்பர்கள் நலம் காண… விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது எதிரிகள் சுகம் காண’ என தனது சமகாலத்து தோல்விகளை ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் கமல்ஹாசன்வெளிப்படுத்தி இருப்பார். இதுபோன்ற பாணியைக் கமல் அவ்வப்போது கடைப்பிடிப்பது உண்டு. அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது சொந்த வாழ்க்கையில் உள்ள மோதல்களைப் படங்களில் வெளிப்படுத்துவது உண்டு. ‘படையப்பா’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘பொம்பளனா பொறுமை வேணும்…’ என ஆரம்பிக்கும் வசனம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிவைத்து எழுதப்பட்டது எனப் பரவலாக பேசப்பட்டது. பின்னாட்களில் தமிழ் சினிமாவில் விஜய் – அஜித்குமார் ஆதிக்கம் தொடங்கியபோதுபன்ச் டயலாக் மோதல் வெளிப்படையாக ஆரம்பித்தது. தீவிர ரசிகர்கள் மட்டுமின்றி சாதாரண சினிமா பார்வையாளர்களின் அறிவிற்கே எட்டும்படியாக அத்தகைய வசனங்களை வைத்து விட்டு
இது யதார்த்தமாக நடந்தது என இருவரது தரப்பும் மழுப்புவது வழக்கம். உதாரணமாக ‘ரெட்’ படத்தில் அஜித் ‘அது’ எனப் பேசும் பன்ச் வசனத்தை கிண்டல் செய்யும் விதமாக ‘யூத்’ படத்தில் வில்லனுக்கு எதிராக ‘என்னடா அது… எது’ என விஜய் கேட்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என ‘திருமலை’ படத்தில் விஜய் பேசிய வசனத்திற்கு எதிராக ஜனா படத்தில் ‘என் வாழ்க்கை வட்டம் கிடையாது…  தொடங்குன இடத்திலேயே வந்து நிற்க’ என
அஜித் பேசும் காட்சி இடம்பெற்றது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக ‘அட்டகாசம்’ படத்தில் ஒரு பாடல் முழுவதும் பன்ச்சாக இடம்பெற்றது. ‘இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன…’ என்று தொடங்கும் அந்தப் பாடலில் ‘ஏற்றிவிடவும் தந்தையில்லை… ஏந்திக்கொள்ள தாய்மடி இல்லை… என்னை நானே சிகரத்தில் வைத்தேன்’ என்ற வரிகள் நடிகை விஜய்யை குறிவைத்தே எழுதப்பட்டவை என இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. சில தோல்விகளுக்குப் பிறகு ‘திருமலை’ படத்தின் மூலம் வெற்றியைப் பெற்ற விஜய், அடுத்து நடித்த ‘கில்லி’யில் ‘கில்லி ஆடலாம், கபடி ஆடலாம், ஆணவத்துல ஆடக்கூடாது’ என்று ஒரு பன்ச் வைத்தார். இந்த வசனங்கள் யதார்த்தமாக வைக்கப்பட்டதாக இயக்குனர்களால் சொல்லப்பட்டாலும் அந்தக் காலகட்டத்தில் நடந்த ரசிகர்கள் போட்டி, மோதலுக்கு எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தன. அரங்குக்குள் கைதட்டலைப் பெற்ற இவ்வசனங்கள், வெளியில் கைகலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. தங்களின் ஆரம்பக் காலகட்ட வளர்ச்சிக்கு  இதை பயன்படுத்திக் கொண்ட இவ்விரு நடிகர்களும், ஒரு கட்டத்தில் இதைக் கைவிட்டனர். அஜித் – விஜய் இருவரும் சந்தித்து பேசிக்கொண்ட புகைப்படங்கள் வெளிவந்தன. இருவரும் ஒருவரை ஒருவர் குறிப்பிட்டுப் பேசும்போது அன்புடனும் மரியாதையுடனும் குறிப்பிட்டே வருகின்றனர்.
அடுத்த கட்ட நடிகர்களும் சில நேரங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது உண்டு. தமிழ் சினிமாவில் அஜித் – விஜய் என்பதற்கு அடுத்த போட்டியாளர்களாகப் பார்க்கப்பட்ட சிம்பு – தனுஷ் இருவரின் ஆரம்ப கட்டப் படங்களிலேயே இவ்வகையான வசனங்கள் வைக்கப்பட்டன. பெரும்பாலும் சிம்புவே இவ்வகை வசனங்களைப் பேசி நடித்துள்ளார். ‘மன்மதன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘வாழ்க்கைல யார் முதல்ல வர்றாங்க என்பது முக்கியம் இல்லை… யார் கடைசியாக ஜெயிக்கிறாங்க என்பதுதான் முக்கியம்’ என்ற ரீதியிலான வசனம் அந்த நேரத்தில் அறிமுகமானதில் இருந்து மூன்று தொடர் வெற்றிகளைத் தந்த தனுஷை குறிவைத்து எழுதப்பட்டதாகவே பார்க்கப்பட்டது. ‘நீ பொல்லாதவன்னா, நான் கெட்டவன்’, ‘லவ் பண்ண பொண்ணு கைவிட்டுட்டான்னு நான் போலீஸ்ல போய் நிக்க மாட்டேன்’ என்று தனுஷை சீண்டி பல வசனங்களைப் பேசியுள்ளார் சிம்பு. அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நன்கு அறிமுகமான நண்பர்கள் என்று அவர்களே கூறியுள்ளனர். சந்தானம் படமொன்றின் விழா மேடையில் இருவரும் ஒன்றாகத் தோன்றி மகிழ்ச்சியாக உரையாற்றினர். இனி அதுபோன்ற வசனங்கள் இருக்காது என்று பொதுவான ரசிகர்கள் சிம்பு – தனுஷ் குறித்துஎண்ணியிருக்கும்
போதுதான் சிம்பு ‘ஈஸ்வரன்’ பன்ச் பேசியுள்ளார். சமீபத்தில் ‘பட்டாசு’ படத்தில் ‘ச்சில் ப்ரோ’ என்ற பாடலில்  இடம்பெற்றிருந்த ‘நம்பி வந்தாக்கா கைவிட மாட்டேன்… நன்றி கெட்டாலும் கண்டுக்கமாட்டேன்’ என்ற வரிகள் தனுஷுடன் நெருக்கமாக இருந்த இன்னொரு நடிகரைத் தாக்கி எழுதப்பட்டதாக பேசப்பட்டது.ஒருகாலத்தில் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே இதனால் ஏற்பட்ட நேரடி மோதல்கள், சமீப காலங்களில் இணையதள மோதல்களாக மாறியுள்ளன. நேரடி மோதல்களால் ஏற்படுகிற ரத்தக் காயங்கள், உயிரிழப்பு இதில் இல்லையென்றாலும் ஒரு தெருவுக்குள் நடந்த மோதல், இன்று உலக சமூகத்தின் முன்னிலையில் இணையத்தில் நடைபெற்று வருகின்றது. வரம்பு மீறிய வசை மற்றும் இழி சொற்கள் துணையோடு நடைபெற்று வரும் இந்த இணைய மோதல் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க எள்ளளவும் துணை புரியப்போவதில்லை. இதைக் கண்டிக்க மற்றும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நடிகர்களுக்கு நிச்சயம் உள்ளது.இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனம், 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் மற்றும் அஜித் கைவிட்ட யுக்தியை நடிகர் சிம்பு மீண்டும் கையில் எடுத்துள்ளாரோ எனத் தோன்றுகிறது. சில தோல்விகள், AAA மாநாடு’ பட சர்ச்சைகள் என ஒரு பின்னடைவைச் சந்தித்திருந்த சிம்புவுக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ கைகொடுத்தது. அதன் பிறகு வந்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் மீண்டும் பில்ட்-அப்புகள் அதிகம். படம் தோல்வியடைந்தது. தற்போது உடல் எடையை குறைத்து வந்திருக்கும் சிம்புவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒரு நல்ல படம்தான். பல நேரங்களில் சமூக அக்கறையுள்ளவராகப் பேசி வரும் நடிகர் சிம்புவிற்கு திரையுலகினர் கூறுவது வேண்டாமே வம்பு