விஷாலின்சக்ரா சங்கடமில்லாமல் வந்துவிடுமா?

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 செப்டம்பர் மாதம் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நேரத்தில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விஷால் மீதும் இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் மீதும் வழக்கு தொடுத்தது.
அப்போது அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில்,
எங்கள் நிறுவனம் நடிகர் விஷால், நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற திரைப்படத்தை தயாரித்தது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘ஆக்‌ஷன்’ படம் வசூலில் சோபிக்கவில்லை. ரூ. 44 கோடி செலவில் படத்தை தயாரிக்க விஷால் வற்புறுத்தினார், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படம் வெளியாகி குறைந்தபட்சம் ரூ.20 கோடியை வசூலிக்கவில்லை என்றால் பற்றாக்குறையைத் தாங்கள் தர ஒப்புக் கொண்டனர்.

ஆனால் அப்படம் தமிழ்நாட்டில் ரூ. 7.7 கோடியும், ஆந்திராவில் 4 கோடியும் மட்டுமே வசூலித்தது. எனவே, ரூ. 8.29 கோடி நிதி இழப்பை ஈடுசெய்ய விஷாலிடம் கோரினோம்.
அப்போது,நிறுவனம் சந்தித்த இழப்புகளை ஈடுசெய்ய விஷால் ஒரு உடன்படிக்கையின்படி ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்து ஆனந்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இந்தத் திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 இலட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திரும்பத் தருவதாகக் கூறி, டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதியளித்து ஒப்பந்தம் செய்தார். ஆனால் விஷால் ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில் இயக்குநர் ஆனந்தன் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதை படமாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.அந்தக்கதை மற்றும் இயக்குநரை வைத்துத்தான் சக்ரா படம் உருவாகியுள்ளது. எங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து சக்ரா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். வெளியீட்டுக்குத் தயாராக உள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ.8.29 கோடியை திரும்பத் தராமல் சக்ரா திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையில், டிரைடெண்ட் நிறுவனத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று விஷாலுக்கு அறிவுறுத்தப்பட்டதாம்.
இப்போது படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டிரைடெண்ட் நிறுவனத்துக்குப் பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்டால்,பணம் கொடுக்கப்படவில்லை என்றும் ஏற்கெனவே டிரைடெண்ட் நிறுவனத்திடம் ஒப்புக்கொண்டபடி ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.அதை அந்நிறுவனமும்ஏற்றுக்கொண்டதாம்.இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளீயாகும் என்றும் சொல்கிறார்கள். இதனால் சக்ரா பட வெளியீட்டில் இருந்த சிக்கல் தீர்ந்தது என்கிறார்கள்.