ஃபயர் – திரைப்பட விமர்சனம்

படம் நெடுக அரிவாள், துப்பாக்கி, வெட்டு, குத்து, இரத்தம் ஆகியனவற்றைத் தெறிக்க விட்டுவிட்டு கடைசியில் வன்முறை மிகவும் ஆபத்தானது அதைக் கையிலெடுக்காதீர் என்று கருத்து சொல்வது போல், பாலியல் காட்சிகள் நிறைந்த படத்தின் இறுதியில்
பெண்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்கிற கருத்து முன் நிறுத்தப்பட்டிருக்கும் படம் ஃபயர்
 சமூகவலைதளங்கள் மூலம் இளம்பெண்களிடம் பழகி பாலியல் தொல்லை கொடுத்த குற்றசாட்டு நிருபிக்கப்பட்டு  ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் ஒருவரது உண்மை கதையை முன்னுதாரணமாகக் கொண்டு திரைப்படத்துக்கேற்ப சிற்சில மாற்றங்கள் செய்து தயாரிக்கப்பட்டிருக்கும் படம் ஃபயர்.
உண்மைக் கதை குற்றவாளிகாசி வேடத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார்.ஒன்றுக்கு நான்கு நாயகிகளோடு மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கிறது. தப்பான வேடத்தை ஏற்று அதில் சரியாக நடித்திருக்கிறார்.

ரக்சிதா மகாலட்சுமி,சாந்தினி தமிழரசன், சாக்க்ஷி அகர்வால், காயத்ரி ஷான் ஆகிய நான்கு நாயகிகளும் முதன்மைப் பாத்திரங்கள் ஏற்றிருக்கின்றனர்.நாயகனுடன் இணைந்து நடிக்கும் போது சூடேற்றும் காட்சிகளில் தயக்கமின்றி நடித்திருக்கின்றனர்.

சிங்கம் புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், பேபி மனோஜ் மற்றும் படத்தின் இயக்குநர் ஜேஎஸ்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களில் விசாரணை
அதிகாரியாக நடித்து அதிக கவனம் ஈர்க்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜேஎஸ்கே.

இசையமைப்பாளர் டீகேவின் இசையில் பாடல்கள் படத்திற்கு மக்களைக் கூட்டிவரப் பயன்பட்டிருக்கிறது.பின்னணி இசையிலும் நெருப்பு மூட்டுகிறார்.

சில பல படுக்கையறைகளுக்குள் புகுந்துவிட்ட ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜியின் ஒளிப்பதிவுக்கருவி அங்கு நடப்பவற்றை தணிக்கை இன்றி காட்ட முயன்றிருக்கிறது.

படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார், படம் வேகமாக நகர்ந்துவிட்டால் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று நினைத்து காட்சிகளுக்கு வேகத்தடை ஏற்படுத்தியிருக்கிறார்.