வசனகர்த்தா உயிர்மையில் எழுதுவதாக நினைத்து எழுதிவிட்டார் போலும்..!படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய பின்புலத்தைப் பற்றிப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பதுதான் உண்மை.சினிமாவைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்குமான குணநலன்கள் மிகவும் முக்கியம். அவரவர் குண நலன்களுக்கெதிரான விஷயத்தை காட்ட வேண்டுமென்றால், அதற்கு நேரெதிரான குணத்தைக் கொண்டவர்களை வைத்துதான் செய்ய வேண்டும். அப்போதுதான் அதில் நடிப்பும், உண்மையும் வெளிப்படும்.தினமும் 5 வேளையும் நமாஸ் செய்து கொண்டு, வீட்டை விட்டு வெளியில் வராமல், வீடு, கணவர், குழந்தைகள், வீட்டு வேலைகள் என்று வீட்டுக்குள்ளேயே சிறை போன்று வாழ்ந்த வந்த ஒரு பெண் தான் வேலைக்கு சென்றால்தான் தன் பிள்ளைக்கான ஸ்கூல் பீஸையே கட்ட முடியும் என்னும் நிலைமை வரும்போதுதான் வீட்டிலிருந்து வெளியில் செல்கிறாள்.வீட்டுக்குள்ளேயே மெதுவாகப் பேசி பழக்கப்பட்டவள், அதிகாரத் தோரணையில் 8 மணி நேரமும் முன் பின் தெரியாதவரிடம் பேசியே ஆக வேண்டும் என்ற சூழல் வரும்போது அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதைத்தான் நாயகி இங்கே நடிப்பாக காட்ட வேண்டியுள்ளது. இதற்காகத்தான் இஸ்லாமிய பின்னணியில் இயக்குநர் கதையை அமைத்துள்ளார்.“ஒரு ஃபர்ஹானா செய்யும் தவறை அனைத்து ஃபர்ஹானாக்களும் செய்வார்கள்” என்று சொன்னால் அது முட்டாள்தனம். ஆனால், ஒரு ஃபர்ஹானா சந்திக்கும் பிரச்சினைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் மற்றைய ஃபர்ஹானாக்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படம் இஸ்லாமிய மக்களுக்கு நல்லதொரு விஷயத்தையும், ஒரு வழிகாட்டுதலையும்தான் சொல்லியிருக்கிறது என்பதுதான் உண்மை.இஸ்லாம், இந்து, கிறித்துவம் என்றில்லாமல் ஒரு பெண், ஒரு மனைவி, ஒரு தாய்.. அவள் சந்திக்கும், எதிர்கொண்ட பிரச்சினைகளின் தொகுப்பாக இந்தப் படத்தை நாம் அணுகுவதுதான் மிக சரியான பார்வையாக இருக்கும்.இந்த ‘பர்ஹானா’வின் வாழ்க்கையை அவசியம் பார்த்தாக வேண்டும்.