அக்காலி – திரைவிமர்சனம்

இறப்பில்லாத மனிதன் என்பதை குறிக்கும் சொல்தான்அக்காலி பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்படும் வழக்குமொழி.இந்தப் பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் எப்படி இருக்கும், அப்படியே

சுடுகாடு,சாத்தான்,நரபலி என்று ஏகப்பட்ட அம்சங்களை மையமாக கொண்டு ஒரு கிரைம் திரில்லர் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விசாரணையில் இறங்குகிறார் காவல் அதிகாரி ஜெயகுமார்.அந்த விசாரணையில் கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போல் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வருகிறது அவை என்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சொல்வதுதான் படம்.
படத்தில் கிறித்துவ மதபோதகராக நடித்திருக்கும் நாசர் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்.அவருடைய வேடத்தின் கனமும் அதில் அவருடைய நடிப்பும் பலம்.

காவல்துறை அதிகாரியாக வரும் ஜெயகுமார் மற்றும் ஸ்வயம் சித்தா ஆகியோரும் நன்றாக நடித்து படம் இயல்பாக நகர உதவியிருக்கிறார்கள். உயரதிகாரியாக நடித்திருக்கும் தலைவாசல்விஜய் திரைக்கதைக்குப் பொருந்தி போகிறார்.இதுபோன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியம்.அதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரிமுர்பி.சில காட்சிகளில் ஒளியமைப்பு காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது.அனிஷ்மோகன் பின்னணி இசையில் இயக்குநரின் எண்ணத்தை நிறைவேற்ற முயன்றிருக்கிறார்.கலை இயக்குநர் தோட்டாதரணியின் உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.

முகமது ஆஷிப் ஹமீது எழுதி இயக்கியிருக்கிறார்.பாதுகாப்பான கதைகள் பல இருக்க இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து தன் தனித்துவத்தை நிறுவ நினைத்திருக்கிறார்.சாத்தான்களை வழிபடும் குழுக்கள் அவர்களின் செயல்பாடுகள் ஆகியனவற்றை விரிவாக தமிழ் சினிமாவில் பதிவு செய்திருக்கிறது அக்காலி.