அம் முச்சி – 2 விமர்சனம்

0
165
இணையத்தொடர்களில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி காமா சோமாவென (காமம்- சோமம்) தொடர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் பலர்.
ஆனால் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஓர் அழகான காதல்கதையைச் சொல்லியிருக்கும் படம்தான் அம்முச்சி 2.
தலைப்பில் வரும் அம்முச்சியாக நடித்திருக்கும் சின்னமணி அம்மாளின் தோற்றமும் அவருடைய உரையாடல்களும் சிலிர்க்க வைக்கின்றன.அவருடைய மகனாக நடித்திருக்கும் பிரசன்னா பாலசந்திரனுக்கு இது பொற்காலம் போலும். தமிழின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றாக வந்திருக்கும் சேத்துமான், இந்தத் தொடர் அதன்பின் சுழல் தொடர் என்று எங்கு பார்த்தாலும் அவர் இருக்கிறார். சிறந்த நடிப்பில் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். மனைவிக்கும் அவருக்குமான காட்சிகள் தரமானவை.
கதையின் நாயகனாக வரும் அருண், அவருடைய சகா சசி,, நாயகி மித்ரா, வில்லனாக வரும் ராஜேஷ்பாலசந்திரன், நாயகனின் அம்மா தனம், பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி உள்ளிட்ட அனைவருமே பொருத்தமாக இருக்கிறார்கள்.சந்தோஷ்குமார் எஸ்.ஜே வின் ஒளிப்பதிவு கொங்குவட்டார கிராமத்தின் அழகை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது.
விவேக் சரோவின் இசை காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

இத்தொடரை இயக்கியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
ஒரு வட்டார வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருப்பது அவருடைய பலம்.

காதல் கதையை வைத்துக்கொண்டு இன்னமும் பழமைவாதம் மாறாத ஒரு கிராமத்துப் பெண் உயர்கல்வி படிப்பதில் உள்ள சிக்கல்களைச் சொல்லியிருப்பதும், கல்லூரி விண்ணப்பப்படிவத்தில் டாக்டர் அனிதா கல்லூரி என்று வைத்திருப்பதும் சிறப்பு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here