சிவகார்த்திகேயன் திரையுலக பயணத்தில் 6 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 அன்று
‘அயலான்’ என்பது படத்தின் கருவை மையப்படுத்திய தலைப்பு. ‘அயலான்’ என்றால் ‘அந்நியன்’ என்றும் அர்த்தம் கொள்ளலாம். படத்தின் கேப்ஷனாக ‘சென்றடையும் இலக்கு பூமி’(Destination earth) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்தே படத்தின் கதையை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒருவருக்கு கஷ்ட காலம் துவங்கிவிட்டதென்றால் “கிரகம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது” என்பார்கள். கெட்டது நடந்துவிட்டால் “கிரகம் சரியில்லை” என்பார்கள். தொடர் தோல்விகளுக்கு “கிரக திசை சரியில்லை. தசா புத்தி சரியில்லை.. எட்டில் சனி எட்டிப் பார்க்கிறான்” என்பார்கள்.
இப்படியொரு சிக்கல் வருகிறது படத்தின் நாயகனான சிவகார்த்திகேயனுக்கு. கொடைக்கானல் அருகில் இருக்கும் பூம்பாறை கிராமத்தில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வரும் சிவாவுக்கு இயற்கை மீது கொள்ளைப் பிரியம். பறவைகளுக்கு அந்த ஊரையே அடைக்கலம் கொடுத்திருக்கிறார். இதையொட்டி ஊரில் வெடி வெடிக்காமல், பறவைகளை துன்புறுத்தாமல் இருக்க வலியுறுத்தி வரும் இன்றைய இளைய சமுதாயத்தின் பிரதிநிதி.
சிவாவுக்கு அந்தப் பொழுதில் கிரகம் சரியில்லை என்பதால் ஒரு நாள் மொத்தமாக வெட்டுக் கிளிகள் பறந்து வந்து சிவாவின் தோட்டத்தை நாசம் செய்ய.. வெட்டுக்கிளிகளை வெட்ட முடியாமல் தவிக்கிறார் சிவா.
அதே நேரம் வில்லனான சரத் ஹெல்கரின் கையில் ஒரு அரிய கல் கிடைக்கிறது. இந்தக் கல்லின் உள்ளேயிருக்கும் காந்தப் புலன்களை வைத்து மிக எளிதாக எதையும் உடைக்க முடியும்.. உட்புக முடியும் என்பதை கண்டறியும் சரத், அந்தக் கல்லை வைத்து பூமிக்கு அடியில் இருக்கும் நோவா கேஸை எடுக்க முயல்கிறார்.அதை எடுத்தால் உலகத்தை ஆட்டிப் படைக்கும் தனி நபர் வல்லரசாக தான் உருவாக முடியும் என்று நம்பும் சரத் சென்னையில் அதற்காக ஒரு பரிசோதனை கூடத்தை நிறுவி, அதற்கான வேலைகளில் இறங்க.. இந்த விஷயம் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் வேற்றுக் கிரகவாசிகளுக்குத் தெரிய வருகிறது.அந்த நோவா கேஸை தோண்டியெடுத்தால் பூமி அழிந்துவிடும் என்று அஞ்சும் அந்தக் கிரகவாசிகள் ‘டாட்டூ’ என்ற ஏலியனை பூமிக்கு அனுப்பி அந்தக் கல்லை கைப்பற்ற நினைக்கிறார்கள். அதற்காக ‘டாட்டூ’ பூமிக்கு வந்து மிக எளிதாக அந்தக் கல்லைக் கைப்பற்றி மீண்டும் தான் வந்த பறக்கும் தட்டில் ஏறப் போகும்போது ஏற்படும் சிறு விபத்தினால் அந்தப் பயணம் நின்று போகிறது.சென்னைக்கு வந்த சிவா எதிர்பாராதவிதமாக கருணாகரன் – யோகி பாபு கூட்டணியோடு ஐக்கியமாகிறார். இந்த நிலையில் டாட்டூவும், சிவாவை பின் தொடர்ந்து வந்து நிற்க.. அனைவருமே திகைக்கிறார்கள். ஆனால் டாட்டூவின் பேச்சில் இருக்கும் உண்மையைத் தெரிந்து கொண்டு சப்தமில்லாமல் டாட்டூவை திரும்பவும் அதன் உலகத்திற்கு அனுப்பி வைக்கத் திட்டமிடுகிறார்கள்.
இந்தத் திட்டத்தில் ஓட்டை போடும் சரத்தின் ஆட்கள் டாட்டூவைக் கடத்திச் செல்ல.. இப்போது தன்னை நம்பி வந்த அயலானான டாட்டூவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சிவா அண்ட் கோ-வுக்கு செல்கிறது.
“இனி என்னவாகிறது..?”, “டாட்டூவை சிவா காப்பாற்றினாரா..?”, “அந்தக் கல் என்னவானது..?”, “வில்லன் சரத் கோஷ்டி நோவா கேஸை எடுத்தார்களா..?” இல்லையா..?”, “பூமிப்பந்து காப்பாற்றப்பட்டதா இல்லையா..?” என்பதுதான் ‘அயலான்’ படத்தின் திரைக்கதை.
பிற்பாதியில் அசர வைக்கும் கிராபிக்ஸ் மாய மந்திர வேலைகளுக்கு நடுவே.. வீரம் விளைந்த உருவமாக டாட்டூவைத் தூக்கி முதுகில் சுமந்தபடியே சண்டையிடும் அந்த வீரனை தனது நடிப்பினால் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
பெரும்ரசிகர்களின் பட்டாளத்தைக் கையில் வைத்திருக்கும் நடிகர்களே இப்படியொரு கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தயங்கும் நிலையில் துணிந்து நடித்திருக்கிறார்
நடிகர், நடிகைகளைத் தாண்டி இந்தப் படத்தில் முக்கியத்துவமானது கலை இயக்கமும், டாட்டூவின் வடிவமைப்பும், கிராபிக்ஸ் காட்சிகளும்தான். படத்தில் அதிகளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.டாட்டூவின் வடிவமைப்பு, பறக்கும் தட்டு, வில்லனின் பரிசோதனைக் கூடம் என்று கதையின் முக்கியப் பகுதிகள் என்றில்லாமல் பூம்பாறை கிராமத்து வீடு, கருணாகரனின் சென்னை வீடு என்று காட்டப்படுபவைகளும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறது.
வெங்கட் செங்குட்டுவனின் முக பாவனைகளுக்கேற்ப டாட்டூவின் செய்கைகளை பிசிறு தட்டாமல் கிராபிக்ஸில் அதே உணர்வோடு கொண்டு வந்திருக்கும் கைவினை கலைஞர்களின் கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஜொலிக்கவில்லை என்றாலும் பின்னணி இசையிலும், ஆக்சன் காட்சிகளின்போதும் ஒலித் துணுக்குகள் நம்மை ரசிக்க வைத்திருக்கின்றன.வெறுமனே அயல் கிரகத்திலிருந்து வந்த ஒரு அயலான் என்பதை மட்டுமே மையப்படுத்தாமல், இயற்கை விவசாயம்.. இயற்கையை பேணிக் காக்க வேண்டும்.. விவசாயிகளின் கடன் தொல்லை.. மனிதர்களின் பேராசை.. பூமியை அழிக்க நினைக்கும் பகாசூர கம்பெனிகள்.. மனிதர்களின் அக்கறையின்மை.. என்று பலவற்றையும் இந்த ஒரு சாகசப் படத்தில் இணைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
தனது முதல் படம் போலவே இந்த இரண்டாம் படத்திலும் தான் ஒரு வித்தியாசமான திறமைக்காரன் என்பதை தமிழ்த் திரையுலகத்திற்குக் காட்டியிருக்கும் இயக்குநர் ரவிக்குமாரின் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது.
தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமல்ல சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமாக அமைந்திருக்கிறது அயலான்’