வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம்ஆதார்’.அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்தப் படத்தின் படத் தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.கட்டிட தொழிலாளியான கருணாஸ் தன்னைவிட வயது குறைவான ரித்விகாவை திருமணம் செய்திருக்கிறார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் ரித்விகாவிற்கு பிரசவ வலி வர அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காலையில் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு கருணாஸ் சென்றுவிடுகிறார்.காலையில் வந்து பார்க்கும்போது குழந்தை மட்டுமே இருக்கிறது. அவரது மனைவி ரித்விகாவை காணவில்லை. மனைவிக்கு உதவிக்கு இருந்த இனியாவும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.தனது மனைவியை காணவில்லை என்று கைக் குழந்தையுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார் கருணாஸ். அங்கு ஏட்டாக இருக்கும் அருண் பாண்டியன் புகாரை வாங்கிக் கொண்டு கருணாஸை வீட்டுக்கு அனுப்புகிறார்.வழக்கு விசாரணையின் முடிவில் கருணாஸை அழைக்கும் இன்ஸ்பெக்டர் பாகுபலி பிரபாகரன், மற்றும் உயர் அதிகாரி உமா ரியாஸ் இருவரும், “உன் மனைவி காணாமல் போகவில்லை. கள்ளக் காதலனுடன் ஓடிப் போய் விட்டாள்” என்று கூறுகின்றனர்.இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் கருணாஸ், “என் மனைவி அப்படிப்பட்டவள் அல்ல” என்று மன்றாடுகிறார். ஆனால் போலீஸாரோ அவர்களது கருத்தில் உறுதியுடன் இருக்கின்றனர்.கருணாஸின் மனைவி என்ன ஆனார்? இனியா எப்படி உயிரிழந்தார்? காவல்துறை சொன்னது உண்மையா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த ஆதார் திரைப்படம்.கருணாஸ் தனது அனுபவமான நடிப்பால் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். கட்டிடத் தொழிலாளியாகவே வாழ்ந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு மென்சோகம் படர்ந்த முகத்துடன் வலம் வந்து கதாபாத்திரத்துக்கு நிறைவை தந்துள்ளார்.அதே போல இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர அருண் பாண்டியன், உமா ரியாஸ் இருவரும் கொடுத்த வேலையை செய்துள்ளனர். இனியா மற்றும் ரித்விகா இருவரும் படத்தின் சோகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘தேன் மிட்டாய் மாங்காத் துண்டு’ பாடல் காதுகளுக்கு இதம் என்றால் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.ஒரு காட்சிக்கும் அடுத்தக் காட்சிக்கும் இடையே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை இறுதிவரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ராம்நாத்.முதல் பாதியில் கருணாஸ் மனைவியை தேடும் படலமும், இராண்டாம் பாதியில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எப்படி அரசு இயந்திரம் துணை போகிறது என்பதையும் சாமானியனின் உயிர் ஒரு பரிசோதனை கூடத்து எலியைவிட மோசமாக பயன்படுத்தப்படுவதையும் தோலுரித்து காட்டியுள்ளார்.மொத்தத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமும், வேகமும் இருந்திருந்தால் ‘ஆதார்’ இன்னும் அதிகமாக கவனம் பெற்றிருக்கும். ஆனாலும் சொல்ல வந்த கருத்தில் அழுத்தம் இருப்பதால் இந்தப் படம் அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாகிறது.Tags:aadhaar movie review cinema review karunaas movie review ramnath palanikumar