ஆலன் – திரைப்பட விமர்சனம்

ஆலன் என்றால் சிவன் என்று பொருள்.இப்பெயரை வைத்துக் கொண்டு எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ..அதுவே ஆன்மிகம் என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.சிவா.படத்தின் நாயகன் எழுத்தாளர் அவர் எழுதும் புத்தகத்தின் பெயர் ஆலன்.

சிறுவயதில் பெற்றோரை இழக்கும் கதாநாயகன் உறவினர்களின் சூழ்ச்சியால் அலைக்கழிக்கப்படுகிறார்.

அதனால் அமைதி வேண்டி காசிக்குச் செல்கிறார்.அங்கு அவரால் இருக்கமுடியாமல் மீண்டும் சென்னைக்கு வருகிறார்.வந்த நேரத்தில்,
ஒரு ஜெர்மானிய பெண்ணைச் சந்தித்து காதலாகி கசிந்துருகுகிறார்.அதிலும் ஒரு கொடும் சிக்கல்.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதுதான் படம்.

படம் நெடுக சடாமுடியுடன் வலம்வருகிறார் நாயகன் வெற்றி.விரக்தி,சோகம்,அமைதி,

ஆன்மீகம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவங்களைக் கொண்டிருக்கிறார்.இளைய தோற்றத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் அதிலும் கவர்கிறார்.

ஜெர்மானிய பெண்ணாக நடித்திருக்கும் மதுரா,அதற்கேற்ப நடித்தும் பேசியும் இருக்கிறார்.அவருடைய உரையாடல்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.

இன்னொரு நாயகியாக வரும் அனுசித்தாரா பாலைவனச் சோலை போல இருக்கிறார்.அவர் வரும் காட்சிகள் இளையோரை ஈர்க்கும் வண்ணம் இருக்கின்றன.

விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி ஆகியோரையும் சரியான வகையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்

விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவில் ஆன்மீகத்தலங்கள் மட்டுமின்றி படத்தின் கதை மாந்தர்களும் கண்களில் நிறைகின்றனர்.

மனோஜ் கிருஷ்ணா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திரைக்கதையோட்டத்துக்கு இசைந்திருக்கின்றன.ஓம் நமச்சிவாய பாடலை வேறுவிதமாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன்,கதையை உள்வாங்கி திரைக்கதையோட்டத்தைத் தெளிந்த நீரோடை போல் கொண்டு சென்றிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.சிவா,ஆலன் எனும் பெயரை வைத்து எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் மேன்மைப்படுத்தியிருக்கிறார். அன்பைக் கொண்டாடுங்கள் காதலைக் கொண்டாடுங்கள்

எனும் கருத்துகளை ஆழப்பதித்திருக்கிறார்.