இந்தியன் 2 வசூல் நிலவரவம் என்ன?

லைகா- ரெட் ஜெயண்ட் தயாரிப்பில்,ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 1500 திரைகளில் வெளியானது. ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது படத்தின்முதல் மூன்று நாட்கள் செய்யும் மொத்த வசூலை பொறுத்தது. இந்தியன் – 2 பிறமொழி படங்களை போன்று முதல் நாள் 100 கோடிரூபாய் மொத்த வசூலை எட்டிப் பிடிக்கும், 1000 ம் கோடி ரூபாய் வசூல் செய்யும் முதல் தமிழ் படமாக இருக்கும் என தமிழ் சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படம் வெளியான முதல் நாளில் இருந்து

படம் பற்றிய ஊடக விமர்சனங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் கருத்துக்கள்  படத்துக்கு எதிராகவே இருந்து வருகிறது. இது போன்ற படங்களின் முதல் நாள் வசூலை தெலுங்கு, இந்தி திரையுலகில் தயாரிப்பு நிறுவனங்கள் பகிரங்கமாக அறிவிப்பது வழக்கம். ஆனால் தமிழ் திரையுலகில் படத்தின் மொத்த வசூலை அறிவிப்பதில் தயக்கம் இருந்து வருகிறது. இதனால் தமிழ் படங்களின் வசூலை தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்களின் அதிகாரபூர்வ தகவலாக தினசரி அல்லது வாரக் கடைசியில் ஊடகங்களால் வெளியிட முடியாத சூழல் இங்கு உள்ளது. இந்தியன் – 2 படத்திற்கு எதிரான விமர்சனங்கள், கருத்துருவாக்கம் இங்கு தீவிரமாக இருந்த போதும் ஒரு தமிழ் படம் முதல் மூன்று நாட்களில் என்ன வசூல் செய்யுமோ அந்த இலக்கை இந்தியன் – 2 எட்டியுள்ளது என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில். நகர்புறங்களில், புறநகர்களில் உள்ள முதல் தரமான, மற்றும் காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களும் 90% இருக்கை டிக்கட்டுகள் விற்பனையாகியுள்ளது. பிற திரையரங்குகளில் 40% முதல் 60% இருக்கைகளுக்கான டிக்கட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் மூன்று நாட்களில் இந்தியன்-2 சுமார் 39 கோடி ரூபாய், ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் 30 கோடி ரூபாய், கேரளமாநிலத்தில் 9 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கர்நாடகா, வட இந்தியா, வெளிநாடுகளில் சுமார் 30 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கும் இந்தியன் – 2 மூன்று நாட்களில் சுமார் 110 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்கின்றனர். ஊடகங்களில், சமூக வலை தளங்களில் மூன்று நாட்களில் 60 கோடி, 70 கோடி ரூபாய் மொத்த வசூல் என செய்திகள் வருவது பற்றி மூத்த விநியோகஸ்தர்கள் சிலரிடம் கேட்ட போது இங்கு வர்த்தக ஆய்வாளர்கள், சினிமா ட்ராக்கர்கள், என தொழில்முறை சமூக வலைதளத்தில் புள்ளி விபரங்களையும், தகவல்களையும் வெளியிடும் கூட்டம் ஒன்று உள்ளது. இவர்களிடம் தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்குகள், திரைகள் இருக்கிறது என கேட்டால் தெரியாது. அப்படிப்பட்டவர்கள் வெளியிடும் தகவல்களை இங்கு ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுவதால் அது உண்மை செய்தியாகி விடாது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் வசூலை வெளிப்படை தன்மையுடன் அறிவிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இங்கு இருப்பதை சரி செய்ய முயற்சித்து வருகிறோம் என்கின்றனர். இந்தியன்-2 படத்தை திரையரங்குகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தோம். மிகப்பெரும் வெற்றி இல்லை என்றாலும் மோசமான வசூல் இல்லை என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 12-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.