இமெயில் திரைவிமர்சனம்

தகவல் தொடர்பில் மாபெரும் புரட்சி செய்த இணையவெளியில், பயன்கள் உள்ள அதே அளவு ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றை மையக்கதையாகக் கொண்டு உருவாகி வெளியாகியிருக்கிறது இ மெயில் திரைப்படம்.

நாயகனாக நடித்திருக்கிறார் முருகா அசோக்.காதல்காட்சிகளில் நெருக்கம் காட்டுகிறார். மனைவிக்கு ஆபத்து என்றதும் உடனே களமிறங்கும் வேகத்தில் கவனம் ஈர்க்கிறார். திரைக்கதையில் குறைவான பங்கு இருந்தாலும் அதில் முழுநிறைவுடன் பணியாற்றியிருக்கிறார்.

கதாநாயகி ராகினிதிவேதிக்கு கதையைத் தாங்கிப் பிடிக்கும் கனமான வேடம்.காதல் காட்சிகள் மட்டுமின்றி சண்டைக்காட்சிகளும் அவருக்கு இருக்கின்றன. இரண்டையும் இரசித்துச் செய்திருக்கிறார்.

இரண்டாவது நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ஆதவ்பாலாஜி, ஆர்த்திஸ்ரீ ஆகியோருக்கும் குறிப்பிடத்தக்க வேடங்கள். அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

மறைந்த மனோபாலா, லொள்ளுசபா மனோகர் மற்றும் வில்லனாக நடித்திருக்கும் பில்லிமுரளி ஆகியோரும் அளவாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

செல்வம் முத்தப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களிலும் காதல்காட்சிகளிலும் அவருடைய செயலால் இளைஞர்கள் மகிழ்வார்கள்.

அவினாஷ் கவாஸ்கர் இசையில் பாடல்கள் தாழ்வில்லை.ஜுபின் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.காட்சிகளுக்கு இசைவாகப் பணியாற்றியிருக்கிறார்.

ராஜேஷ்குமாரின் படத்தொகுப்பு படத்தை வேகமாக்க உதவியிருக்கிறது.

இளைஞர்களைக் கவரும் பொழுதுபோக்கு அம்சங்களைச் சரிவிகிதத்தில் கலந்து இன்றைக்குப் பொதுவான சிக்கலாக மாறியிருக்கும் இணையவிளையாட்டு அது தொடர்பான மோசடிகள் ஆகியனவற்றை விளக்கி அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்கிற பாடத்தையும் நடத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன்.