நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் உடன்பால்.இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொலவடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்கிற நிலையைச் சொல்கிறது உடன்பால்.சென்னையில் கஷ்டப்பட்டு சின்னதாக ஒரு சொந்தவீடு வைத்திருக்கிறார் சார்லி. அவருடைய மகன் லிங்கா, மருமகள் அபர்ணதி பேரன் தர்ஷித்சந்தோஷ் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.தொழில் சரியில்லை அதனால் கஷ்டம் என்பதால் அந்த வீட்டை விற்க நினைக்கிறார் லிங்கா. அதற்காக தங்கை காயத்ரியைத் துணைக்கு அழைக்கிறார். காயத்ரி குடும்பத்துடன் வந்திருக்கும் நேரத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கின்றன. அவை என்ன? அவற்றின் முடிவு என்ன? என்பவனவற்றை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக்சீனிவாசன்.
முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கா, தன் சொந்த உழைப்பில் முன்னேறவேண்டும் என்று நினைக்காமல் அப்பாவின் சொத்தை விற்று முன்னேற நினைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடுத்தர வர்க்க இயலாமை, கோபம், பாசம் ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துகிறார்.
அவர் மனைவியாக வரும் அபர்ணதியின் நடிப்பும் நன்று. கண்மணி மட்டுமில்லை நாங்களும் துடிச்சுப் போயிட்டோம் என்று சொல்லுமிடம் சான்று.
காயத்ரியின் வேடம்ரசிக்க முடியாதது. ஆனால் அதை அவர் செய்திருக்கும் விதம் ரசித்துச் சிரிக்கக்கூடியது. நிலா அப்பா என்று கணவனை அழைக்கும் பாங்குக்கே அவருடைய சம்பளம் சரியாகிவிட்டது. மீதமெல்லாம் இனாம்.காயத்ரியின் கணவராக வரும் விவேக்பிரசன்னா அதகளம் செய்கிறார். மாப்பிள்ளைகளுக்கு மரியாதைக் குறைவு ஏற்படக் காரணமாகியிருக்கிறார்.பொறுப்பான குடும்பத்தலைவராக வரும் சார்லி, அவரது சகோதரியாக வரும் தனம், சார்லியின் இரண்டாவது மகனாக வரும் தீனா,ஒரு காட்சியில் மட்டும் வரும் மயில்சாமி ஆகியோர் உட்பட அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
மதன்கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு நடுத்தரவர்க்க வீடு மற்றும் வாழ்க்கையைப் பதிவுசெய்திருக்கிறது.
சக்திபாலாஜியின் இசை, ஜி.மதனின் படத்தொகுப்பு ஆகியனவற்றோடு எம்.எஸ்.பி.மாதவனின் கலை இயக்கம் படத்தின் கதைக்குப் பலமாக அமைந்திருக்கிறது.தப்பான கதை என்றாலும் சிரிக்கச் சிரிக்கப் படமெடுத்து கடைசியில் சார்லியின் பேரனை வைத்து நெத்தியடியாக ஒரு கருத்தைச் சொல்லித் தப்பிக்கிறார் இயக்குநர்.அதோடு கடைசிக் காட்சியில் சார்லியின் நிலை நெஞ்சைக் கனக்கவைக்கிறது.
டிசம்பர் 30 முதல் ஆஹா இணையதளத்தில் இப்படத்தைப் பார்க்கலாம்.
Next Post