உதயநிதி மீது வழக்கு தொடர்ந்தவர்விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்திரவு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ராமசரவணன் பதில் அளிக்குமாறு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமா வில் கதாநாயகனாக அறிமுகமான படம் ஒருகல் ஒரு கண்ணாடி. அதனை தொடர்ந்து பெரும்பாலும் தனது சொந்த தயாரிப்பு படங்களிலேயே நடித்து வந்தார். அபூர்வமாக ஒரு சில படங்களில்  வெளி தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் நடித்து வந்தார். அப்படியான ஒரு படம் ‘ஏஞ்சல்’.

இந்தப் படத்தை ஓஎஸ்டி பிலிம் சார்பில் ராம சரவணன் தயாரித்தார். உதயநிதி ஜோடியாக ஆனந்தி, பாயல் ராஜ்புட் நடித்தனர். கே.எஸ் அதியமான் இயக்கினார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் டிராப் ஆகியுள்ளது..
இந்த நிலையில் தயாரிப்பாளர் ராம் சரவணன் ‘படத்திற்கு உதயநிதி ஒத்துழைப்பு தராததால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அதற்கு உதயநிதி இழப்பீடு தர வேண்டும் என்றும் ‘ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில் உதயநிதி நாயகனாக நடிக்க ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு. அதன்படி 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியது. 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. 20 சதவீதம் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என அறிவித்திருந்தார்.ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் படத்தை முடித்து விடுவோம். ஆனால் உதயநிதி கால்ஷீட் கொடுக்காமல் புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர இயலவில்லை. அதனால், காலதாமதத்திற்காக 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி உதயநிதி ஸ்டாலின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உதயநிதி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பாளர் ராமசரவணனுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.”