உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக இயக்குநர் பா.ரஞ்சித்

கடந்த வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்  சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மாநாட்டில்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  ‘சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டுள்ளீர்கள். சிலவற்றை ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல்,மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்’ என்றார்.
இதை சுட்டிக்காட்டிபாஜக ஐடி பிரிவின் பொறுப்பாளர் அமித் மால்வியா, இந்தியாவில் சனாதன தர்மததை பின்பற்றும் 80 சதவீதம் பேரை ஒழிப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக கூறியிருந்தார். அதனை தொடர்ந்து உதயநிதி பேசியது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஆனால், தான் பேசியதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தனது குரல் சனாதனத்திற்கு எதிராக தொடர்ந்து ஒலிக்கும் என்றும், சவால்களை சந்திக்கத் தயார் எனவும் கூறினார்.
நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்துமத அமைப்புகள் தரப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில் இயக்குநர் பா.ரஞ்சித் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.பா.ரஞ்சித் தனது x பக்கத்தில், “சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பல நூற்றாண்டுகளாக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சாதியின் பெயராலும் மற்றும் பெண்களுக்கு எதிராகவும் நடைபெறும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கான வேர்கள் சனாதனத்தில் தான் உள்ளன.
அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், பெரியார், ஜோதிராவ் பூலே போன்ற சாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள் அனைவரும் தங்கள் சாதி எதிர்ப்பு சித்தாந்தத்தில் இதையே வலியுறுத்தியுள்ளனர். அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து அவர் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கிறார் என்று தவறாக கூறும் கேடுகெட்ட அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது.உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு தாக்குதல்களும், தனி நபர் தாக்குதல்களும் மிகவும் கவலையளிக்கின்றன. சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் வார்த்தைகளுக்கு ஆதரவளிக்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக உடன் நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.