உழைப்புதான் மூலதனமாகிறது

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் (FEFSI) மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ஒரு தொழிலுக்கு தனி உயிரில்லை. அங்கே உழைப்பவர்களால் மட்டுமே தொழில் உயிர்வாழ்கிறது. உங்களைப்போல உழைப்பவர்களால் தான் இனியும் தொழில் உயிர்வாழும். திரைப்பட படப்பிடிப்பு தளங்களில் நிறைய லைட்மேன்களுடன் பேசி விளையாடியிருக்கிறேன். அவர்களின் உழைப்பு கடுமையானது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் 50, 100 தொழிலாளர்களின் உழைப்பு இருக்கும். அவர்களின் முகம் தெரியாமல் கூட இருக்கலாம். ஒரு வேலை செய்யும்போது அதை புரிந்துகொண்டால் நாம் முன்னேறலாம்.
தொழிலை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். நாம் செய்யும் தொழிலை நன்றாக செய்ய வேண்டும். அதே சமயம் அதை கவனித்து புரிந்துகொள்ள வேண்டும். நிறைய பேர் இயக்குநராக வேண்டும் என வருகிறார்கள்; நடிகராக வேண்டும் என வருகிறார்கள். அதில் சிலர் மட்டும் ஏன் பெரியாளாகிறார்கள்? என்பதற்கு காரணம் அவர்கள் அந்த தொழிலை பார்த்த விதம், புரிந்துகொண்ட விதம். என்றைக்கும் கீழிருக்கும் கூட்டம், கீழேயே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. புரிந்துகொள்ளும்போது அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும்.
சினிமாக்காரர்களுக்கு நிறைய சிக்கல்கள் உண்டு. வருமானம் குறைவாக இருந்தாலும் அதனை சேமித்து வைக்க கற்றுக்கொள்ளுங்கள். அது நம்பிக்கை கொடுக்கும். இங்கிருக்கும் எல்லாமே குகையில் வாழ்ந்த மனிதர் காரிலும், மாட மாளிகையிலும் வாழ்கிறான் என்றால் அதன் மூலதனம் உழைப்பு தான். ஆக உழைப்பை எந்த சிந்தனையில் விதைக்கிறோம் என்பது முக்கியமானது” என்றார்.