“எல்லா பிரச்சினைகளுக்கும் அம்மா அமைப்பா காரணம்..?” பதறிய மோகன்லால்….

ஆகஸ்ட்19 ஆம்தேதி கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை தற்போது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நடிகர் மோகன்லால் 12 நாட்கள் கழித்து நேற்று(31.08.2024) திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேட்டியளித்தார்.
அவர் பேசும்போது, “நான் இந்த மலையாள திரையுலகில் 47 ஆண்டுகளாக ஒரு நடிகனாக இருந்து வருகிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. என்னுடைய  சொந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகளாலும், என் மனைவியின் உடல் நலக் குறைவினாலும் உடனடியாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.கேரள அரசு வெளியிட்ட இந்த ஹேமா கமிட்டி அறிக்கையை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். மலையாள நடிகர் சங்கமான அம்மா என்பது வர்த்தக அமைப்பில்லை. இது ஒரு குடும்பம். ஒரு சங்கம் குறித்து அவதூறு பேசுவது துரதிருஷ்டவசமானது. மற்ற துறைகளை காட்டிலும் மலையாள திரையுலகம் சிறப்பாகவே உள்ளது.
ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு தெரிந்தவரையில் சிலவற்றை இந்த ஹேமா கமிட்டி முன்பாக ஆஜராகி தெரிவித்துள்ளேன். ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளையும், கருத்துகளையும் நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.
குற்றஞ்சாட்டப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். எல்லா வகைகளிலும் நான் அதற்கான முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன். நான் எந்த பவர் குரூப்பிலும் இல்லை. எனக்குத் தெரிந்து அப்படியொரு குழுவும் மலையாளத் திரையுலகில் இல்லை.மலையாளத் திரையுலகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அனைத்திற்கும் அம்மாவைப் பொறுப்பாக்க வேண்டாம். போலீஸ் மற்றும் நீதித் துறை நடத்தும் அனைத்துவித விசாரணைகளுக்கும் அம்மா முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
அம்மா அமைப்பின் புதிய நிர்வாகிகள் அமைப்பினை நிச்சயமாக நல்லவிதமாக நடத்துவார்கள் என்று நம்புகிறேன். அம்மா அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் இன்னும் 2 மாதங்களில் நடைபெறும். எங்களை சரியான திசையில் வழி நடத்துபவர்களுக்கும், இடித்துரைப்பவர்களுக்கும் எங்களது நன்றி..” என்றார் மோகன்லால்.
பல முன்னனி நடிகர்களின் பெயர்கள் இருப்பதால்தான் ஹேமா கமிட்டி முழுமையாக வெளியிடப்படவில்லை என்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, “அது எனக்குத் தெரியாது..” என்றார் மோகன்லால். நிருபர்கள் மீண்டும், மீண்டும் இதே கேள்வியைக் கேட்டதற்கு, “எனக்குத் தெரியாதுன்னா தெரியாதுதான்..” என்று ஆணித்தரமாகப் பதில் சொன்னார் மோகன்லால்.மேலும் சில கேள்விகளுக்குப் பட்டும் படாமலும் “போலீஸ் விசாரணையில், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது..” என்று மறுத்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து புறப்பட்டு சென்றார் மோகன்லால்.