ஐமேக்ஸ் திரைகளில் தி கோட்

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சினிமா தயாரிப்பு, அதனை சார்ந்த பிற பணிகளும் நவீனத்துக்கு மாறி வருகின்றன. அதேபோன்று திரையரங்குகளில் படங்களை திரையிடுவதில் அவ்வப்போது அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்கள் திரையரங்குகளில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. 35 MM அளவில் தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட்டு வந்த நிலையில் 70 MM, சினிமாஸ்கோப், டால்பி சவுண்ட் சிஸ்டம், dts என மாற்றம் கண்டது. துல்லியமான சவுண்ட், அகன்ற திரைகளில் படங்களை பார்ப்பதை  நகர்புற சினிமா பார்வையாளர்கள் விரும்ப தொடங்கியுள்ளார்கள். இந்த தொழில்நுட்பங்கள் உள்ள திரைகளில் புதிய படங்களை திரையிடுவதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குநர்கள், நடிகர்கள் முன்னுரிமை கொடுக்க தொடங்கியதால் திரையரங்குகள் நவீன தொழில்நுட்பங்களை நிர்மாணிக்க தொடங்கிய பின்பு அதற்கேற்ப டிக்கட் கட்டணம் அதிகரித்தது. அதனால் வசூலும் அதிகரித்தது. அந்த வரிசையில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படங்களை திரையிட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளில் ஐமேக்ஸ் தொழில்நுட்பம் உள்ள திரைகள் உள்ளது. இந்தியாவில் குறைவான திரைகளில் ஐமேக்ஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான திரை, துல்லியமான சவுண்ட் இதன் சிறப்பாக கூறப்படுகிறது. சாதாரண திரைகளில் படம் பார்க்க வசூலிக்கப்படும் கட்டணத்தை போன்று இரு மடங்கு தொகை கட்டணமாக ஐமேக்ஸ் திரைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகும் என ஐமேக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தமிழில் ‘லியோ’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்கள் ஐமேக்ஸில் வெளியாகியுள்ளது. ஐமேக்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில் ‘தி கோட்’ குறித்த அறிவிப்பு வெளியாகியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரை ஐமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.