ஒத்த ஓட்டு முத்தையா – திரைப்பட விமர்சனம்

நீண்டஇடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ . அவர் நடித்துள்ள திரைப்படங்களில் இடம்பெற்ற புகழ்பெற்ற பல நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிய சாய் ராஜகோபால் இயக்கியிருக்கிறார்.

அரசியல்வாதியான கவுண்டமணி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படுகிறார்.அவர், தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருக்கிறார்.அந்தத் தங்கைகளோ வெவ்வேறு நபர்களைக் காதலிக்கிறார்கள்.அவர்களையே திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக அண்ணனை ஏமாற்ற ஒரு திட்டம் போடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் மீண்டும் தேர்தல் வருகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி விட வேண்டும்

என்று ஆசைப்படும்  கவுண்டமணிக்கு கட்சி வாய்ப்பு கொடுக்க மறுக்கிறது.அதுமட்டுமின்றி அவரிடம் கார்  ஓட்டுநராக பணியாற்றிய யோகிபாபுவை போட்டியிட வைக்கிறார்கள்.இதனால் கோபமடைந்து கட்சியில் இருந்து வெளியேறி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் கவுண்டமணி.

அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றாரா? அவரது தங்கைகள் அண்ணனை ஏமாற்றி காதலர்களை

திருமணம் செய்து கொண்டார்களா? என்கிற கேள்விகளுக்கான விடைகளை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கிறது படம்.

கதைநாயகனாக நடித்திருக்கும் கவுண்டமணியிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் எல்லாம் இடம்பெற்றிருக்கின்றன.
கவுண்டமணியுடன் யோகிபாபுவும் சேர்ந்திருப்பதால் ரசிகர்களுக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு.

இவர்கள் இருவரும் போதாதென்று வாசன் கார்த்திக்,அன்பு மயில்சாமி,கஜேஸ் நாகேஷ், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், சென்ட்ராயன், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார், மணவை பொன் மாணிக்கம் என படத்தில் ஏகப்பட்ட  நடிகர்கள் இருக்கிறார்கள்.

சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். பாடல்களும், பின்னணி இசையும் அளவாக அமைந்திருக்கின்றன..

எஸ்.ஏ.காத்தவராயனின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் சாய் ராஜகோபால்.கவுண்டமணிக்கான காட்சிகள் எப்படி இருக்க வேண்டும்? வசனங்கள் எப்படி அமைய வேண்டும்? என்பதையெல்லாம் நன்கு உணர்ந்தவர் என்பதால் அதற்கேற்ப செயல்பட்டிருக்கிறார்.