உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து மூன்றாம் உலகப்போரை நடத்திக் கொண்டிருக்கின்றன.அதைத் தமிழ்நாட்டில் இருக்கும் ஹிப்ஹாப் ஆதி கடைசி உலகப் போராக மாற்ற முயல்கிறார்.அவர் முயற்சி வென்றதா? இல்லையா? என்பதே படம்.
படைவீரராகப் பதவியேற்றிருக்கும் ஹிப்ஹாப் ஆதி அதற்கேற்ற முறுக்குடன் இருக்கிறார்.முதலமைச்சர் மகளைக் காதலிக்கிறார்.அந்தக் காதல் உருவாகும் காரணம் அரதப்பழசு.முந்தைய படங்களைக் காட்டிலும் சண்டைக்காட்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
நாயகி அனகா,முதலமைச்சர் மகள் பின்பு அவரே அமைச்சராகி கல்வியின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுகிறார்.
முதலமைச்சரின் உறவினராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், முழுப்படமும் நடக்க மையப்புள்ளியாக இருக்கிறார்.அவருடைய பொறுப்பான நடிப்பு அவருக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
முதலமைச்சராக நடித்திருக்கிறார் நாசர்.சூழ்நிலைக் கைதியாக இருக்கும்போது மக்கள் நலனே முக்கியம் என நினைக்கும் கதாபாத்திரம்.நிறைவாகச் செய்திருக்கிறார்.
புலிப்பாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள்,நடிகராக வரும் ஷிவசாரா ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.ஹரீஷ் உத்தமன்,கல்யாண்,தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் உள்ளிட்டோர் கதாபாத்திரம் உணர்ந்து முழுமைபடுத்தியிருக்கிறார்கள்.
அர்ஜுன்ராஜா ஒளிப்பதிவு மற்றும் கணினி வரைகலைக் காட்சிகள் ஆகியன இணைந்து போரின் கொடுமைகளை உணர்த்த முயற்சித்திருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவுக்கும் சண்டைப்பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூவுக்கும் வேலை அதிகம்.குறைவின்றிச் செய்திருக்கிறார்கள்.
போரே வேண்டாம் எனும் கருத்தைச் சொல்வதற்காக இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.இதுகுறித்து நிறைய யோசித்திருப்பார் போலும் அவை அத்தனையையும் இந்த ஒரே படத்தில் சொல்லிவிட வேண்டும் என்கிற வேகத்தில் அவர் செய்த வேலையால் அவர் என்ன சொல்லவருகிறார்? என்கிற அடிப்படையைக் கூடப் அவரும்புரிந்து கொள்ளாமல், படம் பார்க்க வருபவர்களும் முடியாமல் தவிக்க வைக்கிறது கடைசி உலகப் போர்.