தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி பின்பு திரைப்படங்களில் கவனம் ஈர்க்கும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கே.பி.ஒய்.பாலா இப்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார்.
அவர் நாயகனாக நடிக்கும் முதல்படம் ஃபீல்குட்.இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இப்படத்தில், நமிதா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் நடிகைஅர்ச்சனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு, பட்டாஸ், சுல்தான் போன்ற படங்களில் பணியாற்றிய விவேக் & மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள். பாலாஜி கே.ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை ஷெரீஃப் இயக்குகிறார். தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாக வரவேற்பைபெற்றவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய திரைப்படம், ஒரு ஃபீல்குட் எண்டர்டெயின்மெண்ட் டிராமாவாக உருவாகிறது. இப்படத்திற்கு அவர் தான் கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படம் இது.
இப்படம் குறித்து இயக்குநர் ஷெரீஃப் கூறியதாவது….
‘ரணம் அறம் தவறேல்’ என்ற த்ரில்லர் படத்திற்கு பிறகு, நான் இயக்கும் இந்தக் கதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எனது இரண்டாவது திரைப்படமாக இந்தக் கதையைத் தர வேண்டும் என்பதே என் நோக்கம். நான் இந்தக் கதையை தயாரிப்பாளர் திரு.ஜெய்கிரணிடம் கூறியதும், யோசனையில்லாமல் உடனே ‘ஆம்’ என்று சொன்னார். அந்த நம்பிக்கையும், நேரடி ஆதரவும் ஒரு இயக்குநராக எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியையும் வழங்கியது. பாலா கதாநாயகனாகவும்,தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார்,தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா மேடம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குப் பெருமை தரக் கூடியது.இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. நேர்த்தியான சினிமா கொடுக்க வேண்டும் என்ற என் எண்ணத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.