சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான
வி ஆர் எல் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது.
‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் முதல் கன்னட திரைப்படமான விஜயேந்திராவை
வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர்
தயாரித்திருக்கிறார்.இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன் நேற்று மாலை படக்குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் அப்போது
படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பேசுகையில்,
‘ விஜயானந்த் படத்தினை அறிமுகப்படுத்துவதற்காக அஹமதாபாத்,, லக்னோ, இந்தூர், டெல்லி, கொச்சி, ஹைதராபாத் ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது சென்னைக்கு வருகைத்தந்திருக்கிறோம். சென்றமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி.நான் ஒரு வயதாக இருக்கும் போது என்னுடைய தந்தை விஜய் சங்கேஸ்வர் குடும்பத் தொழிலிலிருந்து விலகி,
வி ஆர் எல் எனும் இந்த வாகன போக்குவரத்து துறையில் 1976 ஆம் ஆண்டில் ஈடுபட தொடங்கினார். தற்போது நாங்கள் ஏழு லட்சம் தொழில் முறையிலான வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வருகிறோம். விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த பொருட்கள் ஜவுளிகள், ஆயத்த ஆடைகள், மருந்து பொருட்கள், அகர்பத்தி காலணிகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் என ஆண்டுதோறும் பத்தாயிரம் டன் எடையுள்ள சரக்குகளை கையாளுகிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 1500 கிளைகளுடன் இயங்கி வருகிறோம். தமிழகத்தில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை இயக்குனர் ரிஷிகா சர்மாவும், நாயகன் நிஹாலும் கொரோனா தொற்று காலகட்டத்தில் தந்தையை சந்தித்தனர். 30 நிமிட சந்திப்பு என்று கூறி தொடங்கிய இவர்களது பேச்சுவார்த்தை, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இவர்கள் திரைக்கதையை விவரித்த விதம், அதற்கான மெனக்கெடல்கள்.. என அனைத்தும் என்னுடைய தந்தையாருக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு எங்களது நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். இந்த படத்தின் உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் 99 சதவீதம் இடம் பிடித்திருக்கிறது. ஒரு சதவீதம் படைப்பு சுதந்திரத்திற்காகவும், திரைப்படத்திற்கான வடிவமைப்பிற்காகவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளை சொல்லலாம்.” என்றார்.