கலகத்தலைவன் – விமர்சனம்

பணம் சம்பாதிப்பதைமட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு அதற்காக எத்தகைய அத்துமீறல், கொலைகளை அலட்சியமாகச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றிற்குத் துணைபோகும் அரசாங்கங்கள் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியனவற்றை திரைமொழியில் சமரசமின்றி இயக்குநர் மகிழ்திருமேனி

பதிவு செய்திருக்கும் படம் கலகத்தலைவன்.கதாநாயகன் உதயநிதி ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்பதை அவரது அறிமுக காட்சியிலேயே காட்டிகதைக்குள்நம்மைஅழைத்துச் செல்கிறார் இயக்குநர்.
அதன்பின் உதயநிதி செய்யும் ஒவ்வொரு செயலும்  ஆச்சரியமூட்டுபவை.கடற்கரையோரம் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடுகிறார், தனியறையில் தற்காப்புக் கலைப்பயிற்சி மேற்கொள்கிறார். தொடர்வண்டி நிலையத்தில் எதிரிகளைக் கலைக்கிறார்.இவற்றிற்கு நடுவே நாயகி நிதிஅகர்வாலைப் பேசியே கவர்கிறார். இவை உட்பட இறுதிக்காட்சியில் செய்யும் சண்டைவரை ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்குத் தன்னைப் பொருத்திக்கொண்டிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிதிஅகர்வால், இக்கால இளம்பெண்களின் பிரதிநிதி. உதயநிதியைச் சந்திக்கும் முதல்காட்சியிலிருந்து கடைசிவரை நன்றாக நடித்திருக்கிறார்.இதுவரை தமிழ்த்திரையுலகம் கண்டிராத வில்லன் கதாபாத்திரம். பார்த்தாலே பயம் வரும் அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து நாயகனைவிடச் சற்று உயர்ந்துநிற்கிறார் ஆரவ்.

நாயகனின் நண்பராக வரும் கலையரசன், விக்னேஷ், வில்லனின் ஆளாக வரும் அங்கனாராய் உள்ளிட்ட அனைவரும் அவரவர் வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை இயக்குநரின் சிந்தனைக்குப் பலம் சேர்த்திருக்கிறது.தில்ராஜுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.ஸ்ரீகாந்த் என்.பியின் படத்தொகுப்பு தேவைக்கு உரியதாகஇருக்கிறது.அடர்த்தியான கதைக்களம்,மெதுவாக ஆனால் ஆழமாகச் செல்லும் திரைக்கதை, புதிது புதிதான கதாபாத்திரங்கள், அழகான ஆண் பெண் உறவு ஆகியனவற்றோடு ஜீவாரவியின் மூலம் எங்கோ ஃபரிதாபாதில் நடக்கும் ஒரு வியாபார ஒப்பந்தம் தமிழகத்தின் கடைக்கோடி மனிதரை எவ்வளவு பாதிக்கிறது? என்பதை விவரிக்கும் காட்சி நம்மை நேரடியாக உணர வைக்கிறதுஇன்றைய இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் செயல்களை அம்பலப்படுத்திகிற படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது கலகத்தலைவன்