காத்துவாக்குல ஒரு காதல் – திரைப்பட விமர்சனம்

காத்து வாக்குல ஒரு காதல் என்ற பெயரைப் பார்த்ததும் காதல் படம் என்று நினைத்தால்,படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள். கடைசியில் வன்முறை கூடாது என்று கருத்துச் சொல்லுகிறது படம். N

நாயகன் மாஸ் ரவியும், நாயகி
லட்சுமி பிரியாவும் காதலிக்கிறார்கள்.காதலென்றால் சும்மா காதல் இல்லை, கடவுள் தோன்றி என்ன வரம் வேண்டும்? என்று கேட்டால் கூட எப்போதும் பிரியாத காதலர்களாக இருக்க வேண்டும், என்று சொல்லும் அளவுக்குக் காதலிக்கிறார்கள்.

இந்நிலையில், நாயகன் மாஸ் ரவி திடீரென்று காணாமல் போய் விடுகிறார். அவரைத் தேடி அலைகிறார் நாயகி லட்சுமி பிரியா. மாஸ் ரவியை மீண்டும் பார்க்கும்போது அவர் ஒரு மாஸ்ரவுடியாக இருக்கிறார்.காதலியைத் தெரியாதவர் போல் கடந்து போகிறார்.நாயகனின் மாற்றத்திற்குக் காரணம் என்ன? நாயகியின் காதல் என்னவானது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் மாஸ்ரவி இப்படத்தை இயக்கியும் இருக்கிறார்.அதனால் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய அளவில் காட்சிகள் அமைத்திருக்கிறார்.காதல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் இரண்டு விதமான தோற்றங்கள் இரண்டுவிதமான நடிப்பு ஆகியனவற்றில் குறைவின்றி தன்னை நிருபித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் லட்சுமிபிரியா, எளிய அழகு.நடிப்பில் மின்னுகிறார்.காதல் மற்றும் காதலனுக்கான அவருடைய தவிப்பு சிறப்பு.

இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் மஞ்சுவும் குறைவில்லை.

சண்டைப்பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் வில்லனாகவும் வருகிறார்.முதன்மை வில்லனாக இருக்கும் சாய் தீனாவுக்கு வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வித்தியாசமான வேடம்.அதை பொறுப்பாகச் செய்திருக்கிறார்.

நகைச்சுவைக்கு ஆதித்யா பாஸ்கர், தங்கதுரை ஆகியோர் பொறுப்பேற்று அங்கங்கே சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி ஆகியோரும் தங்கள் பங்கை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

இசைமைப்பாளர்கள் ஜிகேவி மற்றும் மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் கேட்கலாம். தேவா பாடியிருக்கும் பாடல் கூடுதல் கவனம் பெறுகிறது.பின்னணி இசை பொருந்தவில்லை.

ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் சுற்றிச் சுழன்றிருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி எழுதி இயக்கியிருக்கிறார்.இன்றைய இளைய தலைமுறையினர் ரவுடித்தனத்தில் ஈர்க்கப்படக்கூடாது என்கிற கருத்தை ஏகப்பட்ட குழப்பங்களுடன் சொல்ல முயற்சித்து இருக்கிறார்.