காமெடியும் வன்முறையும் நிரம்பிய ஹேப்பி எண்டிங் டீசர்

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஹேப்பி எண்டிங்’ அறிவிப்பு டீசர் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 45’ திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது சூர்யாவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வானந்த் இயக்குநராக அறிமுகமாகும் ‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். இப்படமும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சூழலில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹேப்பி எண்டிங்’. அறிமுக இயக்குனர் அம்மாமுத்து சூர்யா இயக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

குட் நைட், லவ்வர் போன்ற வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதில் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியிடம் கடந்த கால காதல்கள் குறித்து ஒரு பெண் கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் பாலாஜியின் கைகளில் நூடுல்ஸ் சாப்பிட பயன்படும் ஃபோர்க்கை வைத்து கையில் தொடர்ந்து குத்துகிறார். அதனைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் அவரிடம் பிரேக் அப் செய்வதாக கூறி கடுமையாக தாக்குகின்றனர். எனினும் அதீத வன்முறையுடன் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. காதலில் க்ளிஷேவாக சொல்லப்படும் காரணங்கள் நகைச்சுவையான முறையில் டீசரில் காட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி டீசரில் வசனங்கள் டபுள் மீனிங் இல்லை சிங்கிள் மீனிங் ஆகவே நேரடியாக பயன்படுத்தப்பட்டுள்ளன.