கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முன்னோட்டம் எப்படி?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம்  ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ், தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னோட்டம் எப்படி?:

‘தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ’ என்ற ராகவா லாரன்ஸ் வசனத்துடன் 90களின் உடை அலங்காரத்தில் முன்னோட்டத்தின் தொடக்கம் கவனம் பெறுகிறது. எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுகம் பேசும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. பின்னணியில் சந்தோஷ் நாரயணன் தன் இசையின் மூலம் இன்னொரு நாயகனாக அதகளம் செய்கிறார். ஷைன் டாம் சாக்கோவின் என்ட்ரி சர்ப்ரைஸ்.ட்ரெய்லரில் காட்டப்படும் அரங்கம், உடை, இடங்கள் என எல்லாமே கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார் என சொல்ல வைக்கிறது. ஜிகர்தண்டா முதல் பாகத்தின் வெற்றியை சீர்குலைக்காமல் இப்படம் தடம் பதிக்குமா என்பதை அறிந்து கொள்ள நவம்பர் 10 அன்று படம் வெளியாகும்வரை காத்திருக்கவேண்டும்.