‘கால பைரவா’, ‘புல்லட்’ முதல் பார்வை போஸ்டர்கள் எப்படி?

நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கால பைரவா’ மற்றும் ‘புல்லட்’ படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் ‘கால பைரவா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. படத்தை கோனேரு சத்யநாராயணா தயாரிக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இது ராகவா லாரன்ஸின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ஆக்ரோஷத்துடன் ராகவா லாரன்ஸ் நின்று கொண்டிருக்கிறார்.
குறிப்பாக லாரன்ஸின் தோற்றமும் கூட ஃபோட்டோஷாப் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான போஸ்டரில் பெரிய அளவில் வித்தியாசமில்லை.

இதேபோல ராகவா லாரன்ஸ் நடிக்கும் மற்றொரு படமாக ‘புல்லட்’ படத்தின் முதல் தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை ‘டைரி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இன்னிசை பாண்டியன் இயக்குகிறார். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் படத்தை தயாரிக்கிறார்

படத்தின் போஸ்டரை பொறுத்தவரை காவல் துறை அதிகாரியான ராகவா லாரன்ஸ் புகைப்பிடித்துக் கொண்டு முரட்டுதனமானலுக்கில் காட்சி அளிக்கிறார். அவருக்கு பின்புறம் குதிரையும், நெருப்பும் இருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.