தன் பேரனுக்கு புது துணியை வாங்கித் தர முடியவில்லையே என்ற சோகத்தில் வீட்டுக்குச் செல்வதை தாமதப்படுத்தும் தாத்தாவும், மறுபுறம் புதுத்துணியை வாங்கித் தர தாத்தா வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கி தவிக்கும் பேரனுமாக விரியும் காட்சிகள் உணர்வுகளின் வெவ்வேறு கோணங்களையும், ‘நுகர்வு கலாசார’த்தின் வீரியத்தையும் அழுத்தமாக உணர்த்துகின்றன. இந்த உணர்வு நிலைகளிலிருந்து பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார் இயக்குநர் ரா.வெங்கட். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளிய இப்படம் (நவம்பர் 11-ல்) இன்றுதிரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
பெற்றோர் விபத்தில் உயிரிழக்க, பேரனை அரவணைப்புடன் பார்த்துக் கொள்கிறார் செல்லையா (பூ ராமு). வயது முதிர்ச்சி காரணமாக உரிய வேலை கிடைக்காமல் வறுமையில் துவண்டு கொண்டிருக்கும் தாத்தாவிடம் பேரன் கதிர் தீபாவளிக்கு துணி எடுத்து தர சொல்லி கேட்கிறார். பேரனின் ஆசையை மறுக்க முடியாத செல்லையா கடன் வாங்கியாவது புது துணியை எடுத்து தர வேண்டும் என பல வழிகளில் போராடுகிறார். எல்லா போராட்டங்களும் ஒரு கட்டத்தில் தோல்வியைத் தழுவுகின்றன. இறுதியில் குலதெய்வத்துக்காக நேர்ந்துவிட்ட ‘கிடா’யை விற்கும் முயற்சியில் இறங்குகிறார்.
மறுபுறம் கறி கடையில் வேலை பார்க்கும் வெள்ளைச்சாமி (காளிவெங்கட்), அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு வருவதால் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். இதை எதிர்த்து தான் வேலைபார்த்த கடைக்கு எதிரிலேயே தீபாவளியை முன்னிட்டு புது கடையை திறந்து வியாபாரம் செய்வதாக சவால்விட்டு, அதற்கான கிடா’வை தேடி அலைகிறார். ஒரு வழியாக செல்லையாவின் ‘கிடா’வை வெள்ளைச்சாமி வாங்க வரும்போது கிடா களவாடப்படுகிறது. இறுதியில் கிடா கிடைத்ததா, இல்லையா? பேரனுக்கு செல்லையா துணி எடுத்து கொடுத்தாரா? வெள்ளைச்சாமியின் சவால் நிறைவேறியதா? – இப்படி பல கேள்விகளுக்கு உணர்வுபூர்வ காட்சிகளுடன் பதில் சொல்கிறது திரைக்கதை.தாத்தா, பேரன் இடையில் நிகழும் கதையில் ‘கிடா’(ஆடு)வையும் ஒரு கதாபாத்திரமாக்கி அதன் வழி உணர்வுகளை கடத்தியிருப்பது அழகியல். எந்த இடத்திலும் அயற்சியை ஏற்படுத்தாமல் கிராமத்தின் அன்றாட நிகழ்வுகளை அருகிலிருந்து பார்ப்பது போன்ற காட்சிகளை அடுக்கியிருந்ததும், திணிக்காமலும், சோகத்தை கசக்கி பிழியாமலும் கதையோட்டத்துடன் பொருந்திப்போகும் எமோஷனல் காட்சிகள் உரிய தாக்கம் செலுத்துவது பலம்.
அதேபோல இஸ்லாமியர் கதாபாத்திரங்களை எந்தவித துருத்தலும் இல்லாமல் கதைக்குள் கொண்டு வந்து, ‘நல்லிணக்கத்தை’ நுணுக்கமாக பேசியிருப்பது தமிழ் சினிமாவின் அரிய காட்சியமைப்பு. பெண் கதாபாத்திரங்களுக்கு தொடக்கத்தில் முக்கியத்துவம் இல்லாமல் போனாலும், ஆண்களால் ஏற்படும் சிக்கல்களை இறுதியில் பெண் கதாபாத்திரங்கள் மூலம் தீர்வு காண வைத்திருந்தது பாராட்டத்தக்கது.
தீபாவளி பண்டிகையை எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து அணுகியிருக்கும் இப்படைப்பு உணர்வுக் குவியலாக மனித மனங்களை ஆக்கிரமிக்கிறது.
இடைவேளைக்குப் பிறகு சேஸிங்கில் நுழையும் படத்தின் நடுவில் வரும் காதல் போர்ஷன் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும், மொத்தமாக படம் முடிந்து வெளியே வரும்போது சிலருக்கு காற்றில் பறக்கும் இறகைப் போல லேசான மனமும், சிலருக்கு கண்களில் ஈரம் காய்ந்த கண்ணீரும் இருக்கலாம்!