குட் நைட் – சினிமா விமர்சனம்

ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெய்ன்மெண்ட்  எனும் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.இந்தப் படத்தில் ‘ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்குநராக ஸ்ரீகாந்த் கோபால் பணியாற்ற, பட தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் பணி புரிந்துள்ளார். அறிமுக இயக்குநரான விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருக்கிறார். பத்திரிகை தொடர்பு – யுவராஜ்.குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும்போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறார்கள்.‘மோகன்’ என்ற மணிகண்டன் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்கிறார். அப்பா இ்ல்லை. அம்மா, தங்கை, கல்யாணமான அக்கா, அக்கா கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.இவருக்கு இருக்கும் ஒரேயொரு மிகப் பெரிய பிரச்சினை குறட்டைவிடுவதுதான். அதுவும் சாதாரண லெவலில் இல்லை. கீழ் வீட்டுக்கெல்லாம் கேட்கும் அளவுக்கு..! இதனாலேயே இவரது முதல் காதல் அற்பாயுசில் காலியாகிறது.மணிகண்டனின் அக்கா கணவரான ரமேஷ் திலக், வாட்டர் பில்டர் பிக்ஸ் செய்யும் வேலையைச் செய்து வருகிறார். ரமேஷ் திலக் ஒரு நாள் நாயகி குடியிக்கும் குடியிருப்பில் வசிக்கும் பாலாஜி சக்திவேல் வீட்டிற்கு வாட்டர் பில்டரை மாற்றுவதற்காக செல்கிறார். உடன் துணைக்கு மணிகண்டனும் செல்கிறார்.அப்போது அந்த வீட்டின் மாடியில் குடியிருந்து வரும் நாயகியை பார்க்கிறார் மணிகண்டன். அந்த சந்தர்ப்பத்தில் நாயகிக்கும், அவருக்கும் இடையில் ஒரு குட்டி நாயை வைத்து விரும்பத்தகாத செயல்கள் நடந்து விடுகிறது. ஆனால், இதனை நாயகி ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வதைப் பார்க்கும் மணிகண்டனுக்கு நாயகியைப் பெரிதும் பிடித்துப் போய்விடுகிறது.தொடர்ந்து நாயகியைப் பார்க்கப் போக வர இருக்க இருவருக்கும் இடையில் காதலும் பற்றிக் கொள்கிறது. இதைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேலும், அவரது மனைவியும் சேர்ந்து, மணியின் குடும்பத்தினருடன் பேச இருவருக்கும் திருமணம் நடக்கிறது.முதல் இரவிலேயே குறட்டை தன் வேலையைக் காட்ட நாயகி அதிர்ந்து போகிறார். ஏனெனில் அவருக்கு சத்தம் என்பதே ஆகாது. டிரெயின் சப்தம் கேட்டாலே காதைப் பொத்திக் கொள்வார். கணவரிடமிருந்து இந்தக் குறட்டையை எதிர்பார்க்காத நாயகி இதை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமலேயே குழப்பத்தில் இரவெல்லாம் தூங்காமலேயே இருக்கிறார்.இதுவரையிலும் பேசாமடந்தையாகவே வாழப் பழகவிவிட்ட நாயகி, கணவரை எதிர்க்கேள்வி கேட்கவே கூச்சப்படுகிறார். பயப்படுகிறார். தயங்குகிறார். இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுகிறார் நாயகி.கூடவே அவருக்குள் இருக்கும் தான் ஒரு அதிர்ஷக்காரியில்லை. தன்னால் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வரும் என்ற தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து கொள்ள தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்படுகிறது.மற்றொரு பக்கம் இந்தக் குறட்டையை விட்டொழிக்க அனைத்து வகை மருத்துவ முறைகளையும் பின்பற்றிப் பார்க்கிறார் நாயகன். பலனில்லை. கடைசியாக மனைவியை இம்சைப்படுத்துவதற்குப் பதிலாக அவரிடமிருந்து பிரிந்து விடுவது நல்லது என்று நினைக்கிறார் மணிகண்டன்.இறுதியில் என்னவானது.. மணிகண்டனின் குறட்டை சப்தம் ஒழிந்ததா.. பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடினார்களா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.படத்தில் அனைத்து நடிகர், நடிகைகளையும் மிகச் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநரான விநாயக் சந்திரசேகரன். குறட்டையை சுமந்து கொண்டே திரியும் ஒரு அப்பாவி இளைஞனாக மணிகண்டன், தனது நடிப்பைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.முதல் காதல் தோற்ற வலியில் அழுது புலம்பி தனது பரிதாப நிலையைக் காட்டி நமக்குப் பெரிதும் பிடித்துப் போகிறார் மணிகண்டன். நாயகியை முதன்முதலாக சந்திக்கும் காட்சியில் ஏடாகூடமாகச் செய்துவிட்டு சங்கடப்படுவதும், அம்மா, தங்கை, அக்கா, அக்கா கணவரை ஏகத்தும் லந்து செய்து கலாய்த்துத் தள்ளும்விதத்திலும் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.குறட்டை குடும்பத்திலேயே குத்த வைத்து உட்கார்ந்து கும்மியடிப்பதை பார்த்து வெறுத்துப் போய் மனைவியைக் கத்திவிட்டு மீண்டும் அவரிடமே “ஸாரி” கேட்டு சமாளிக்கும் வித்தையையும் காட்டியிருக்கிறார். அலுவலகத்தில் கடைசி நாளில் பக்ஸை போட்டுத் தாக்கிவிட்டு கிளம்பும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார் மணிகண்டன்.நாயகியான மீதா ரகுநாத் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். அப்பிராணி முகம்.. பேச்சே வராத குரல்.. மிரண்ட கண்களுடன் எதையும் எதிர்கொள்ளும் பெண்ணாக இந்தப் படத்தில் ஒரு தூணாக இருந்திருக்கிறார் மீதா.குறட்டையினால் ஏற்படும் பாதிப்பை ஒண்ணுமே இல்லை என்று மூடி மறைக்கும்விதத்திலும், கணவரை எந்தவிதத்திலும் சங்கடப்படுத்த கூடாது என்ற மனநிலையில் இவர் பேசும் பயந்த பேச்சும், அடக்கமான, பாந்தமான நடிப்பும் “பாவம்யா இந்தப் பொண்ணு” என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறது.சரியான அளவில் கவுண்டர் டயலாக்குகளை டெலிவரி செய்து சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறார்கள் ரமேஷ் திலக்கும், மணிகண்டனின் அம்மாவும். “மோகன்” என்ற பெயரை வைத்து அம்மாவும், மகனும் பேசுகின்ற பேச்சும், அக்கா, தங்கையிடம் குறட்டையினால் தப்பிக்க மணிகண்டன் சொல்லும் சமாளிப்புகளும்தான் முதல் பாதியை பெரிதும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறது.மணிகண்டனின் அக்காவான ரபேக்கா ராய்ச்சல் குழந்தைப் பேறுக்காகக் நீண்ட வருடங்களாகக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் மன வலியை கண் முன்னே காட்டியிருக்கிறார்.ஒருமித்த தம்பதிகள் என்பதாக பாலாஜி சக்திவேலையும், அவரது மனைவியையும் சொல்லலாம். பாலாஜியின் பேச்சும், சிரிப்பும், சமாளிப்பும் பல காட்சிகளில் ரசிப்போடு சிரிக்கவும் வைத்திருக்கிறது.இவர்களையும் தாண்டி சிறப்பாக நடித்திருக்கிறார்(து) ஒரு சின்ன நாய்க்குட்டி. குறட்டை சப்தத்தைக் கேட்டவுடன் தாங்க முடியவில்லை என்பதுபோல பக்கத்து அறைக்குத் தாவி ஓடுவதும், மணிகண்டனின் விரட்டலுக்கு பயந்து அங்கிட்டும், இங்கிட்டுமாக தப்பித்து, தப்பித்து ஓடும் அந்த வாயில்லா ஜீவனும் பல இடங்களில் கை தட்டல்களை எழுப்பியுள்ளது.தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் சிறப்பாகத்தான் உருவாகியுள்ளது. அரசு குடியிருப்பு வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களையும், மணிகண்டனின் தனி வீட்டுக்குள் நடக்கும் அலம்பல்களையும் காட்சிப்படுத்தியதில், கேமிரா கோணத்தில் தனி ஆவர்த்தனம் காட்டியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும்..!ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதிலும் மாண்டேஜ் காட்சிகளை வைத்து படத்தை நகர்த்தியுள்ளதால் பாடல்கள் இரண்டாம்பட்சமாகி காட்சிகளே முழுமையாக ஆக்கிரமித்துள்ளன.கலை இயக்குநரின் கை வண்ணத்தில் வீடுகளின் உட்புற வடிவமைப்பு சிறப்பு. ஒலிப்பதிவாளர் சமையல் அறை காட்சிகளில் துல்லியமாக ஒலியைக் கொடுத்திருக்கிறார். படத் தொகுப்பாளரின் சிறப்பான தொகுப்பினால் படம் நெடுகிலும் நகைச்சுவை தாண்டவமாடியிருக்கிறது.கதையே இல்லையே என்றெல்லாம் சொல்லாமல் இது போன்று சின்னச் சின்ன, நம்மிடையே இருக்கின்ற பிரச்சினைகளை வைத்து இன்றைய யூத்துக்களுக்கும் பிடிக்கும்வகையில் படங்களை செய்தால் நிச்சயமாக ஹிட்டடிக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.திரைக்கதையிலேயே நகைச்சுவையைக் கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். ஹோட்டலுக்கு குடும்பத்தினரை “வாங்க”,  என்றும் “வராதீங்க” என்றும் நாயகனும், நாயகியும் மாறி மாறி போன் செய்து சீன் போடுவதும், இறுதிக் காட்சியில் “ஏர்போர்ட்டுக்கு திரும்பலாம்..”, “வீட்டுக்குப் போகலாம்” என்று ஆட்டோவிலும், காரிலுமாக யு டர்ன் அடிக்கும் காட்சிகளிலும் தியேட்டர் அதிரும் அளவுக்குக் கை தட்டல் பறக்கிறது.வெறும் குறட்டைதானே என்றெல்லாம் சொல்லாமல் இப்படியும் இதனால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்பதைச் சொல்லி அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் காட்டி, அதையும் தாண்டியதுதான் காதல், கணவன், மனைவி, குடும்பம் என்ற இத்யாதிகள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் இயக்குநர் காட்டுவது இதைத்தான்…!படம் நெடுகிலும் சிரிக்க வைத்து, கை தட்ட வைத்து உற்சாகமாவே வழியனுப்பி வைத்திருக்கும் இந்த அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்..!