குழந்தைகள் முன்னேற்றக் கழகம் – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றியம் முழுவதிலும் அரசியல் கட்சிகளுக்குள் ஆதிக்கம் செலுத்தும்வாரிசு அரசியல் நிறைந்திருக்கிறது.அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்.

யோகிபாபு அரசியல்வாதி.அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.இந்நிலையில்,வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவாடுகிறார்.

அவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

இவர்கள் இருவருக்குமே அப்பாவைப் போல அரசியல்வாதியாக வேண்டுமென தீராத ஆசை.அவர்கள் நினைத்தபடி நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம்.

கதையின் நாயகர்களாக இமயவர்மன் மற்றும் இயக்குநர் சங்கர் தயாள் மகன் அத்வைத் (இங்கும் வாரிசு) ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.வயதுக்கு மீறிய பேச்சு செயல் ஆகியன இருந்தும் அவற்றை இயல்பாகச் செய்து நன்றாக நடிக்கிறார்கள் என்கிற பெயரைப் பெறுகிறார்கள்.
அவர்கள் உடன் வருகிற ஹரிகா படேடா, மாஸ்டர் பவாஸ் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

அரசியல் கட்சித்தலைவராக நடித்திருக்கும் செந்தில்

வரவேற்பைப் பெறுகிறார்.சுப்பு பஞ்சு, சித்ராலட்சுமணன்,மயில்சாமி உள்ளிட்டோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

லிஸி ஆண்டனி வழக்கம்போல் இந்தப்படத்திலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதித்திருக்கிறார்.

சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்கள் சுமார் ரகமே பின்னணி இசை அளவு.

ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன.

படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ படத்தின் குறைகளை தம் உழைப்பின் மூலம் நிவர்த்தி செய்கிறார்.

அண்மையில் மறைந்துவிட்ட சங்கர் தயாள்இயக்கியிருக்கிறார்.

அவருடைய முந்தைய படமான சகுனியைப் போலவே இந்தப்படத்திலும் சமகால அரசியல் நிகழ்வுகளை வைத்து அவர் செய்திருக்கும் நையாண்டிகள் சிரிக்க வைக்கின்றன.அதற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்தியிருப்பது

ஏற்கும்படியாக இல்லை

அதேநேரம், அரசியல் கட்சிப் பொறுப்பு மற்றும் ஆட்சியதிகாரங்கள் குடும்ப உறுப்பினர் என்பதற்காகவே கொடுத்துவிடக்கூடாது என்பதையும் அப்படிக் கொடுத்தாலும் தனித்திறன் மற்றும் அயராத உழைப்பு இல்லையென்றால் செல்லாது என்பதையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.