இந்தியன்-2 படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தெலுங்கு சினிமா விநியோகஸ்தர்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர். திரைப்படங்களில் பிரம்மாண்டங்களை காட்சிப்படுத்தி சினிமா இயக்குநர்களில் தனித்த அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டவர் இயக்குநர்
ஷங்கர். தமிழைத் தவிர பிற மொழிகளில் நேரடியாக படங்களை இயக்கவில்லை. அவரது சொந்த தயாரிப்பில் தமிழில் இயக்கிய முதல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்தப் படம் 2001 ஆம் ஆண்டு இந்தியில் நாயக் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அனில்கபூர், அம்ரிஷ் பூரி, ராணி முகர்ஜி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 21 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வெளியான நாயக் பெரும் வெற்றியை பெறவில்லை. அதன் பின் பிறமொழிகளில் படங்கள் இயக்கும் வாய்ப்பு வந்தும் ஷங்கர் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. அர்ச்சுன், பிரபுதேவா, கமல்ஹாசன், விக்ரம், ரஜினிகாந்த், விஜய், பிரசாந்த் என நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வெற்றிகரமான இயக்குநராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஷங்கர் புதுமுகங்களை வைத்து இயக்கிய ஒரே படம் பாய்ஸ். இந்தப்படம் ஆபாசமாகவும், அநாகரிகமான வசனங்களும் நிரம்பியதாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதன் பின் அந்நியன், படத்தை இயக்கியதன் மூலம் பாய்ஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார் ஷங்கர். பொருளாதார நெருக்கடி, கொரோனா பொது முடக்கம் காரணமாக இந்தியன் – 2 படப்பிடிப்பு முடங்கியது. அதனால்
22 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 பிப்ரவரியில் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் சரணின் 15வது படத்தை ஷங்கர் இயக்கப் போவதாக அறிவிப்புகள் வந்தது. 2021 அக்டோபர் மாதம் ஆரம்பமான படப்பிடிப்பு கடந்த மூன்று வருடங்களாக நடந்து வருகிறது.
ராம்சரணின் 15வது படம் என்பதை ‘ஆர்சி 15’ என்று அறிவிக்கப்பட்ட படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.300 கோடி ரூபாய் செலவில் தயாராகி வருவதாக கூறப்படும் கேம் சேஞ்சர் படத்தின் கடைசி இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் சூலை 12 ஆம் தேதி வெளிவந்த ‘இந்தியன் 2’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன. தெலுங்கில் 25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்தியன் – 2 மூன்று நாட்களில் 30 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. அடுத்து வந்த வாரத்தின் தொடக்க நாட்களில் தியேட்டர் வசூல் மோசமாக உள்ளது. 60 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தால் மட்டுமே அசல் தேறும்.28 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில், பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் வெளியான ‘இந்தியன் 2’ வசூலில் தடுமாறி வருவதை கண்டு தெலுங்குத் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஷங்கரின் இயக்கத்தில் தெலுங்கில் முதன் முதலாக உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் ராம்சரணை காட்டிலும் இயக்கநர் ஷங்கருக்கு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.ராம் சரண் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ இந்திய திரையுலகை பிரம்மிக்க வைத்த படம். 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த இந்திய படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதே போன்றதொரு வெற்றியை கேம் சேஞ்சர் பெற வேண்டும் என தெலுங்கு திரையுலகம் எதிர்பார்க்கிறது. அது நிறைவேறுமா என ராம்சரண் ரசிகர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்தியன்-2 படத்தின் தோல்வியில் இருந்து ஷங்கர் மீண்டு வர’கேம் சேஞ்சர்’ ஷங்கருக்கு ‘சேஞ்சாக’ ஆக இருக்குமா என்கிற பயத்துடன் காத்திருக்கிறது தெலுங்கு திரையுலகம்.