கூழாங்கல்’ படத்தை அடுத்து பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள படம், ‘கொட்டுக்காளி’. சூரி, மலையாள நடிகை அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சிவகார்த்தியேன் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட்23 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கொட்டுக்காளி’ என்பது தென் தமிழகத்தில் புழங்கும் மண் சார்ந்த ஒரு வார்த்தை. எப்ப பாரு கொட்டுக் காளிமாதிரியே பேசுறான், நடக்குறான், என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான் என்பார்கள்.
கொட்டுக் காளி என்றால்பிடிவாதத்துடன் இருப்பது, தனக்கு விருப்பப்பட்டதை வெளிப்படையாகச் சொல்வது என்று அர்த்தம். பாண்டி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். அவருடன் சேவல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறது எனக் கூறும் இயக்குநர் வினோத் ராஜ்
நம் வாழ்வியலுக்கு மிகவும் நெருக்கமான படமாக இது இருக்கும். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் கிடையாது. லைவ் சவுண்ட் வைத்தே எடுத்திருக்கிறோம். இது ஒரு பயணத்தின் கதை. அந்தப் பயணத்தின் வழியாக மனிதர்களைப் புரிந்துகொள்ளும் விதமாக இந்தப் படம் இருக்கும். பட விழாக்களில் வெளியாகும் உலகப் படங்களை பார்த்துதான் என் சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். நம் வாழ்க்கையையும் உலக பட விழாக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தையும் அப்படித்தான் உருவாக்கி இருக்கிறேன் என கூறியிருந்தார் இயக்குநர் வினோத் ராஜ். படம் வெளியாவதில் பைனான்ஸ் பிரச்சினை இருக்கிறது என்கிற தகவல் சினிமா வியாபார வட்டாரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் அப்படி எதுவும் இல்லை அறிவித்தபடி ஆகஸ்ட் 23 ஆம் தேதி “கொட்டுக் காளி” திரைக்கு வரும் என்பதை அந்தப் படத்தில் நடித்துள்ள சூரியின் வலைதள பதிவு உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று மாலை சூரி தனது x தள பக்கத்தில்
“என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுபட்ட திரைப்படமாக கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு உண்மைக்கு மிக நெருக்கமானபடம். இதில் வரும் என்னுடைய பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்களிலும் இருக்கும் ஒருவன் தான்.இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவுமுறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மனப்போராட்டத்தை சரியாக பிரதிபலிக்கணும்னு ரொம்ப கவனமாக இருந்தேன். அதை சரியாகவும் பண்ணி இருக்கேன்னு நம்புகிறேன். நீங்கள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்” என அந்தப் பதிவில் சூரி கூறி உள்ளார்.
.