நான் உலக சினிமாக்களை அதிகம் பார்த்ததில்லை. தமிழ் சினிமாவை பார்த்து வளர்ந்தவன் நான். தமிழில் வித்தியாசமாக வந்த படங்கள் தான் என்னுடைய புரிதல். பிறகு ‘கூழாங்கல்’ படத்தைப் பற்றி பேசி பேசி புரிந்து கொண்டேன். இயக்குநர் வினோத் இந்தப் படத்துக்காக ரோட்டர்டாம் விருது பெற்றிருப்பதாக சொன்னார்கள். இந்த விருது அறிமுக இயக்குநர்களுக்கு வழங்கப்படும் விருது. இதனை முன்னதாக கிறிஸ்டோஃபர் நோலன் பெற்றிருக்கிறார் என்று சொன்னார்கள். நான் திகைத்து விட்டேன்.மதுரையிலிருந்து சென்று சர்வதேச விருது பெற்றிருக்கிறார் வினோத் ராஜ். அப்போதே வினோத்தின் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன் என உறுதியளித்தேன். அவரைக் கொண்டாட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருந்தது. அதனால் தான் இந்தப் படத்தை தயாரித்தேன். இந்தப் படத்தில் நான் முதலீடு செய்ததை தாண்டி லாபம் வந்தால் அதிலிருந்து உங்களுக்கு (வினோத்) அடுத்த படத்துக்கு நான் அட்வான்ஸ் கொடுப்பேன். உங்களுக்கு என்ன படம் இயக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதனை எடுங்கள்.அதையும் தாண்டி கூடுதல் லாபம் கிட்டினால், வினோத் ராஜ் போல வேறு யாராவது இருக்கிறார்களா என தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு திருப்பி அளிக்கும் முயற்சியாக நான் இதனை பார்க்கிறேன். இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இல்லை என இயக்குநர் என்னிடம் சொல்லும்போது ஆச்சரியமாக இருந்தது. இசையில்லாமல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.