நாயகன் ஏகன் அவருடைய தங்கை சத்யாதேவி ஆகியோரை குழந்தைகளாக விட்டுவிட்டு அம்மா போய்விட அப்பாவும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார்.ஆதரவு கொடுத்த பாட்டியும் மறைந்துவிட கோழிப்பண்ணை நடத்தும் யோகிபாபு அடைக்கலம் கொடுக்கிறார்.அப்பா அம்மா இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்கிறார் அண்ணன்.தங்கைக்குக் காதல் வந்திருக்கிறது என்றதும் அதிர்ந்து போகிறார்.அதை ஏற்றாரா? எதிர்த்தாரா? என்ன நடந்தது? என்பதைச் சொல்கிறது படம்.
தலைப்பில் வரும் செல்லதுரையாக நடித்திருக்கும் புதுமுக நாயகன் ஏகன்,அசல் கிராமத்து இளைஞர்களின் பிரதிநிதி போல் இருக்கிறார்.அவருக்கு முதல்படத்திலேயே பாசம்,காதல்,சோகம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய கனமான கதாபாத்திரம்.அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நியாயம் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகாவுக்குக் கதையில் சின்ன இடம்தான்.இருக்கும் வரை குறைவில்லாமல் இருக்கிறார்.
தங்கையாக நடித்திருக்கும் சத்யாதேவி,நாம்தான் கதையின் மையம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா,லியோ சிவக்குமார்,நவீன்,குட்டிப்புலி தினேஷ் உள்ளிட்டோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ் உழைப்பு அசல் கிராமமொன்றில் நடமாடிய உணர்வு ஏற்படுகிறது.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
எழுதி இயக்கியிருக்கும் சீனுராமசாமி, மனித உணர்வுகளை மேம்படுத்தும் ஒரு படைப்பைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.