சதுரங்க விளையாட்டு பின்னணியில் சமூகப் பிரச்சனையை பேச வரும் ‘நாற்கரப் போர்’ திரைப்படம்!
V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப் போர்’.
இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். இவர் ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் இறுகப் பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கபாலி, பரியேறும் பெருமாள் புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.
பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி, மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சி.கே. என்பவர் படத் தொகுப்பை மேற்கொள்கிறார். கலை ஶ்ரீமன்ராகவன். பாடல்கள் குகை மா.புகழேந்தி.
இந்த ‘நாற்கரப் போர்’ குறித்து இயக்குநர் ஸ்ரீவெற்றி கூறும்போது, “சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி, அரசியல்வாதி-மக்கள் என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளையும், அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும்படியான தொலைநோக்கு பார்வை இல்லாதவரை இங்கு இவர்களுக்குள்ளான போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற அரசியலை பேசுகிறது.
அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்கே அன்றி, தனி மனித தாக்குதலாக மாறக் கூடாது என்பதையும் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்தப் படம் பேசுகிறது.
தூய்மைப் பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் அரசியல் ரீதியான, ஜாதி ரீதியான, பிரச்சனைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப் போர்’ உருவாகி உள்ளது” என்கிறார்.
சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்து மனிதர்கள் பலரையும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.
தற்போது இப்படத்தின் டைட்டில் லுக், பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.