சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’.இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில்திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் பேசும்போது,
“தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டுக்குப் படம் எடுக்க, கேரளாவில் இருந்து வந்திருக்கும் இவர்களை வரவேற்கிறேன்.
ஒரு திரைப்படம் எடுக்க இயக்குநரை விட, நடிகர்களை விட தயாரிப்பாளர் முக்கியம்.
தமிழில் ஆண்டுக்கு 200 படங்கள் வந்தாலும் 150 தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். இதுதான் நிலைமை. இதற்கு யார் காரணம்?
25 நாட்களில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ராமநாராயணன் குறுகிய காலத்தில் நன்றாகத் திட்டமிட்டுப் படத்தை எடுத்து அதிக அளவில் வெற்றிகளைக் கொடுத்தவர். 20 அல்லது 28 நாட்களில் ஒரு படத்தை முடித்து விடுவார்.ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அவர் கதாநாயகனை நம்பாமல் விலங்குகளை நம்பிப் படம் எடுத்தார் ,வெற்றி பெற்றார்.
எந்த ஒரு நடிகர் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த நடிகர் வெற்றி பெறுவார். அந்த வகையில் பிரஜினுக்கு நல்ல வெற்றி காத்திருக்கிறது. அண்மைக்காலமாகப் பெரிய கதாநாயகர்கள் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடவில்லை. சிறிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன.
குட் நைட், டாடா, போர் தொழில் இப்போது வந்துள்ள வாழை போன்ற சிறிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழ் மண்ணை அதன் பண்பாடு கிராமியத்தை சரியாகச் சொன்னால் மக்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள். இந்த சேவகர் படம் நிச்சயம் வெற்றி பெறும். தயாரிப்பாளர் மனதிற்கும் இயக்குநரின் நம்பிக்கையும் உரிய பலன் கிடைக்கும்.
இப்போது அதிகாரிகளிடம் 70 சதவீதம் கையூட்டு வாங்குகிறார்கள். நேர்மையானவர்கள் 30 சதவீதம் தான் இருக்கிறார்கள். அக்கிரமம் நடக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் காரணம்.
எதற்கெடுத்தாலும் முதலமைச்சரைக் குறை கூறுகிறார்கள். இவனுக்கு பஸ் தாமதமாக வந்தால் கூட முதலமைச்சர் என்ன செய்கிறார் என்கிறான். எல்லாவற்றையும் முதலமைச்சர் எப்படி கவனித்துக் கொண்டிருக்க முடியும்? சம்பந்தப்பட்ட இலகா அதிகாரிகள் தான் அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் .முதல்வரும் எத்தனையோ சந்திப்பு போட்டு அதிகாரிகளிடம் பேசுகிறார். சம்பந்தப்பட்டவர்கள் சரியாகப் பணியாற்ற வேண்டும்.
சமுதாய சீர்கேட்டைத் தட்டிக் கேட்கும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.
அக்கிரமம் நடைபெறும் போது நாம் கண்டிக்க வேண்டும். தண்டிப்பதை அரசு பார்த்துக் கொள்ளும். இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.