சரத்குமார் முடித்து வைத்த மழை பிடிக்காத மனிதன் பஞ்சாயத்து

சிவாஜி கணேஷன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற படம் முதல் மரியாதை
இந்தப் படத்தில் நடிகர் ஏ.கே. வீராச்சாமி கதை நாயகரான சிவாஜியிடம்” சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்” என கேட்பது இன்றளவும் மக்கள் அன்றாடம் தங்களது உரையாடல்களில் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி ஒரு கேள்வியை” மழை பிடிக்காத மனிதன்” படக்குழுவினரை நோக்கி கேட்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளனர்.
பத்திரிகையாளர்களுக்கு புதிய திரைப்படங்களை வெளியீட்டுக்கு முன்பு அல்லது வெளியான பின்பு பிரத்யேகமாக திரையிடுவார்கள். அப்போது படத்தின் கதையை, அல்லது இறுதிக் காட்சியை பற்றியும் விமர்சனத்தில் எழுதி விடாதீர்கள் என இயக்குநர் வேண்டுகோள் வைப்பது காலங்காலமாக நடந்து வருகிறது.
 ஆனால் திரைப்படம் வெளியான அன்று முதல் காட்சி முடிந்தவுடன் படத்தின் கதை உலகம் முழுவதும் சென்றடைந்து விடும். இந்த அடிப்படை புரிதல் இல்லாமலே தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த பின்பும் இயக்குநர்கள் கூறி வருகின்றனர்.
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால் கதாநாயகனை கொண்டாடுவதும், ஓடவில்லை என்றால் இயக்குநர் சொதப்பிவிட்டார் என கூறுவதும் இங்கு சர்வசாதாரணமாகி விட்டது. உண்மையான காரணங்கள் கண்டறியப்படாமல் சம்பந்தபட்டவர்கள் அடுத்தடுத்த படங்களுக்கு போய்விடுகின்றனர்.
 பாதிப்புக்குள்ளாவது முதலீடு செய்த தயாரிப்பாளர் மட்டுமே. அது போன்ற சூழல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோலி சோடா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மழை பிடிக்காத மனிதன். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் பார்க்க வரும் பார்வையாளனின்  எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியது.
படம் வெளியான முதல் நாளே வசூலில் தடுமாறியது” மழை பிடிக்காத மனிதன்” வசூல் நிலவரம் கலவரமாய் இருக்க, விஜய் ஆண்டனி குறித்த கதாபாத்திரம் யார் என்கிற உண்மையை ஒரு நிமிட வீடியோ மூலம் ரசிகர்களுக்கு ஆரம்ப காட்சியிலேயே கூறி விடுகிறார்கள். இதனால் படம் பார்க்கும்போது அவர் யார் என்று தெரிந்து கொண்டே படம் பார்ப்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் அவர் மீதான சுவாரஸ்யம் ரசிகர்களுக்கு ஏற்படவில்லைஇந்த ஒரு நிமிட காட்சி தனது கவனத்திற்கு வராமலேயே சேர்க்கப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் விஜய் மில்டன். தணிக்கை சான்றிதழ் பெற்ற பின் எதையும் இணைக்க முடியாது. மொக்கை படம் எடுத்து விட்டு தியேட்டருக்கு படம்பார்க்க பார்வையாளர்கள் வரவில்லை என்பதால் சம்பந்தமில்லாமல் இயக்குநர் பேசுகிறார் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இயக்குநர் குற்றசாட்டுக்கு மழை பிடிக்காத மனிதன் படத்தின் தயாரிப்பாளர் பதில் கூறுவதற்காக ஆகஸ்ட் 3 அன்று பகல் 12 மணிக்கு அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.நடிகர் சரத்குமார் இயக்குநர், தயாரிப்பாளர்கள் இடையில் பேச்சுவார்த்தை நடத்தியதால் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் மில்டன் தனக்கு தெரியாமல் மழைபிடிக்காத மனிதன் படத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் விஜய் மில்டன்  எல்லாமே படத்தின் நலம் கருதித்தான் நடந்தது என்றும் மேலும் இந்த பிரச்சனையில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த நடிகர் சரத்குமாருக்கு மிகவும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் தரப்பிற்கும் விஜய் மில்டனுக்கும் பல நாட்களாக இந்த படம் தொடர்பாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இது போன்ற ஒரு நிமிட காட்சியை உருவாக்கி சேர்த்து இருக்கிறார்கள் விஜய் மில்டன் தரப்பில் குற்றசாட்டு கூறப்பட்டு வந்தது.
தணிக்கை சான்றிதழ் பெற்றபின்ஒரு புதிய காட்சியை படத்தில் எனக்கு தெரியாமல் சேர்த்தனர் என்று விஐய் மில்டன் எழுப்பிய குற்றசாட்டு உண்மையா அல்லது படக்குழுவினர் படவிளம்பரத்துக்காக திட்டமிட்டு நடத்திய நாடகமா என்கிற உண்மை தெரியாமலேயே பிரச்சினை முடிக்கப்பட்டுள்ளது.