கே.ஜி.எஃப் பார்ட் 1, பார்ட் 2 என்று இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநரான பிரசாந்த் நீல் மற்றும் அதன் தயாரிப்பாளரான ஹொம்பாலே ப்லிம்ஸ் விஜய் கிர்கந்தர் ஆகியோர் மீண்டும் இணைந்திருக்கும் படம் “சலார்”.
அதில் நாயகனாக நடிப்பதோ “பாகுபலி” புகழ் பிரபாஸ். இந்த மூன்று பிராண்டுகளுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அது போக படத்தின் டிரைலர் காட்சிகளும் மீண்டும் கே.ஜி.எஃப் போல ஒரு மிகச் சிறந்த ஆக்க்ஷன் ட்ரீட் நமக்காக காத்திருக்கிறது என்று கட்டியம் கூறியது. கட்டியம் பலித்திருக்கிறதா…? என்பதைப் பார்ப்போம்.
மிகப் பெரும் வெற்றிப் படங்கள் கொடுக்கின்ற இயக்குநர்களுக்கு அடுத்தப் படம் என்பது அதைவிட பெரிய சவால்.
ஏனென்றால் முன்னர் கொடுத்த அதே வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற தனிப்பட்ட குறிக்கோளும், முந்தைய படம் போல் சிறப்பாக இந்தப் படமும் இருக்குமா..? என்கின்ற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் அந்தப் படம் போல் இல்லையே என்று பார்வையாளர்கள் ஒப்பிட்டு விடுவார்களோ என்கின்ற எண்ணமும் சேர்ந்து அதீதமான அழுத்தத்தை இயக்குநர் மீது ஏற்படுத்தி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
அது பிரசாந்த் நீல் விசயத்தில் நடந்திருப்பது அப்படியே தெரிகிறது.
ஏனென்றால் “சலார்” திரைப்படத்தை கதையாக அணுகும்போது, கே.ஜி.எஃப் திரைப்படத்தின் கதையை சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்து எடுத்திருப்பது போன்ற தோற்றம் தருகிறது.
நாயகன் தேவா-வாக வரும் பிரபாஸுக்கும் அவரின் நண்பன் வரதராஜ மன்னாராக வரும் ப்ருதிவிராஜுக்குமான நட்பு மட்டும்தான் புதிது.
ஆனாலும்கூட அந்த நட்பின் அடித்தளத்திற்கான காட்சிகள் வலுவாக அமையப் பெறவில்லை.
இது தவிர்த்து அம்மா செண்டிமெண்ட், அம்மா சொல்லை மீறாத பிள்ளை.
பாதுகாப்புடன் புதுவித சட்ட திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நகரம், அந்த நகரத்தின் அதிகார மையத்தை கைப்பற்றுவதில் இருக்கும் குழுக்களுக்கு இடையிலான போட்டி.
அந்த நகரத்திற்குள் சில காரணங்களுக்காக அழைத்து வரப்படும் நாயகன், அந்த நகரத்திற்குள் நடக்கும் அநியாயங்கள், அதில் பாதிக்கப்படும் பொதுமக்கள், இதையெல்லாம் சில காலங்களுக்கு பொறுத்துக் கொண்டிருக்கும் நாயகன், பின்னர் அதை தட்டிக் கேட்கத் துவங்குவது.
நாயகனின் பில்டப் காட்சிகள், நாயகன் தொடர்பான கதையை ஒருவர் விவரிப்பது என்று ஒட்டு மொத்த கே.ஜி.எஃப் கதையும் அப்படியே சலாரிலும் உண்டு.
ஆனால் வித்தியாசம் என்னவென்றால் கே.ஜி.எஃப் திரைப்படத்தின் ஆக்க்ஷன் காட்சிகளோ, அம்மா செண்டிமெண்ட் காட்சிகளோ, நாயகனுக்கான பில்டப் காட்சிகளோ அதில் ரசிக்கும்படியும் நம் மனதோடு கனெக்ட் ஆகும் விதத்திலும் இருக்கும்.
சலாரில் அவை அனைத்துமே அந்நியமாகப்படுகிறது.
முதல் பாதியின் பெரும் பாதி நாயகனின் வீரத்தைப் பறை சாற்றும் பில்டப் காட்சிகளாகவே அமைந்திருக்கின்றன.
தோற்றத்தில் ஆஜானுபாகுவாக இருக்கும் பிரபாஸின் உடல் மொழி ஆக்க்ஷன் காட்சிகளில் பொருந்திபோகவில்லை.
பாகுபலி திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளில் அவர் உடல் மொழியில் இருந்த உயிர்ப்பு, சலார் சண்டைக் காட்சிகளில் இல்லை.
மேலும் பிரசாந்த் நீல் நடிகர்களிடம் மிகையற்ற நடிப்பை வாங்க கூடியவர். 90 சதவீதம் ஆக்க்ஷன் காட்சிகளால் நிரம்பி இருந்த கே.ஜி.எஃப் திரைப்படத்தில் அழுகையோ, கோபமோ, பயமோ, வீரமோ என்ன உணர்வாக இருந்தாலும் அது யதார்த்தமானதாக மிகையற்றதாக இருக்கும்.
ஆனால் சலாரில் முத்திரையைப் பார்த்து பயப்படும், பிரபாஸின் முகத்தைப் பார்த்துப் பயப்படும், தோற்றத்தைப் பார்த்து பயப்படும், அடியைப் பார்த்துப் பயப்படும் என பயப்படுவது போன்ற காட்சிகள் பல வருகின்றன.
எல்லாக் காட்சிகளுமே மிகை நடிப்புடன் படு செயற்கைத்தனமாக இருக்கின்றது. அது போக பிரபாஸ் தொடர்பான பில்டப் காட்சிகள் படம் நெடுக வருகின்றது.ஆனால் அதில் ஒரு காட்சி கூட ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
படத்தின் முதல் பாதியில் இரண்டு சிறுவர்கள் இடையேயான நட்பும், அவர்கள் மாறி மாறி உதவிக் கொள்வதும் காட்டப்படுகிறது.
பின்னர் கடத்தப்படும் நாயகி ஸ்ருதிஹாசன் மைம் கோபியால் மீட்கப்பட்டு, நாயகனிடம் ஒப்படைக்கப்படுகிறாள்.
அவளை கொல்ல முயலும் கூட்டம் வேறு வேறு வழிகளில் அவளைக் கொல்ல முயல, ஒரு கட்டத்தில் மறைவாக வாழ்ந்து வரும் நாயகன், வெளிப்படையாக வந்து நாயகியை மீட்க களம் காணுகிறான்.
அவனை பார்த்த மாத்திரத்தில் எதிரணி பயந்து நிலை குலைகிறது. இவ்வளவுதான் முதல் பாதியில் கதை.
இரண்டாம் பாதியில் கான்சார் நகரத்தில் நடந்த இன அழிப்பு, அதன் பின்னர் அதிகாரம் ராஜமன்னாரால் கைப்பற்றப்படுவது, அந்த அதிகாரத்தை அவரிடம் இருந்து பறிக்க நடத்தப்படும் சதித் திட்டங்கள்,
ராஜமன்னாரின் இரண்டாம் தாரத்தின் மகனாக இருக்கும் வரதராஜ மன்னாரான ப்ருதிவிராஜுக்கு நிகழ்த்தப்படும் அவமானங்கள்,
ராஜமன்னார் ஒரு கட்டத்தில் மகனான வரதராஜ மன்னாருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கும் அதிகாரத்தை கொடுக்க முடிவு செய்து அறிவிப்பது,
ராஜமன்னார் வேறொரு காரணத்திற்காக நகரத்தை விட்டு தற்காலிகமாக வெளியே செல்வது, அவர் திரும்ப வருவதற்குள் வரதராஜ மன்னாரை கொலை செய்வதற்கான முயற்சியில் மற்ற குழுக்கள் இறங்குவது…
இதற்காக ஒவ்வொரு குழுவும் பிரத்யேகமான படைகளை இறக்குவது, தன்னைக் காத்துக் கொள்வதற்காக ப்ருதிவிராஜ் பிரபாஸுன் உதவி தேடிச் செல்வது என இரண்டாம் பாதியில் இரண்டு நிமிடத்திற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.
பிரபாஸ் மற்றும் ப்ருத்விராஜ் உடன் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, மைம் கோபி, பாபி சிம்ஹா, ஜான் விஜய், ராமச்சந்திர ராஜு, டினு ஆனந்த், மதுகுருசாமி, மீனாக்ஷி செளத்ரி, ஜான்ஸி, சரண் சக்தி, என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது.
ஆனால் இவர்களில் நடிப்பதற்கான வாய்ப்புள்ள கதாபாத்திரமாகத் தெரிவது ப்ருதிவிராஜ் கதாபாத்திரம் மட்டுமே.
அவர் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
அதற்கு அடுத்ததாக ஸ்கோர் செய்வது பிரபாஸுன் அம்மாவாக வரும் ஈஸ்வரி ராவ். பயம், கோபம், அக்கறை, பரிதவிப்பு என எல்லாவற்றையும் ஒரு சேர காட்டும் கதாபாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார். மைம் கோபியும் குறை வைக்கவில்லை.
இரண்டாம் பாகத்திற்கான லீட் முதல் பாகத்தின் முடிவில் சிறப்பாக அமைந்திருப்பது ஆறுதல்.
மற்ற முக்கிய நடிகர்களுக்கான ஸ்கோர் செய்யும் ஏரியாக்கள் இரண்டாம் பாகத்தில் இருக்கும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது.
அது போக முதல் பாகத்தில் தவறவிட்ட விசயங்களை இரண்டாம் பாகத்தில் பிரசாந்த் நீல் கூட்டணி கச்சிதமாக கைப்பற்றும் என்கின்ற நம்பிக்கையும் கூடவே இருக்கிறது.
ஏனென்றால் அதற்கான அத்தனை முன்னறிவிப்பும் முதல் பாகத்தின் முடிவில் கொடுக்கப்பட்டு இருப்பதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் இருக்கிறது.
மொத்தத்தில் சலார் அதீதமான பில்டப் காட்சிகளினாலும், அழகியலோ புதுமையோ இல்லாத வன்முறையினாலும், கே.ஜி.எஃப் திரைப்படத்தின் கதை மற்றும் காட்சிப் பின்புலத்தை நகலெடுக்க முயன்றிருப்பதாலும், சற்று அயர்ச்சியைக் கொடுக்கிறது.
இருந்தாலும் இரண்டாம் பாதியில் கூறப்பட்ட கதையும், நண்பர்கள் விரோதிகளாக மாறவிருக்கும் காட்சிகளை நோக்கி நம் மனதை முன் தயாரிப்பு செய்தவிதமும், முதல் mi பாகத்தின் முடிவுப் புள்ளியும் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.