சாதிய பிரச்சினையை பேச வரும் ‘அம்புநாடு ஒன்பது குப்பம்’

பூபதி பாண்டியன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘அம்புநாடு ஒன்பது குப்பம்’.இந்தப் படம் பற்றி இயக்குநர் ஜி.ராஜாஜி பேசும்போது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தில் பல சமூகத்து மக்கள் வாழ்கிறார்கள். அந்த ஊரில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், பொருளாதார முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்கிற பிற்போக்குத்தனமான பழைமைவாத சிந்தனையை உள் வாங்கியிருக்கும் ஊர் அது.
தாழ்த்தப்பட்ட சாதியினரை ஜாதியின் பெயரால், தீண்டாமைக் கொடுமையைக் கடைப்பிடித்து தள்ளியே வைத்திருக்கிறார்கள் பிற சாதியினர்.”ஊர்க் கோவிலில் திருவிழா வருகிறது. இத்திருவிழாவிலில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கோவில் பூசாரி வைத்திருந்த தாம்பூலத் தட்டை தொட்டு விபூதி எடுத்து விடுகிறார். இதனால் அங்கு கலவரம் ஏற்படுகிறது.
வேறொரு சமூகத்தை சேர்ந்த பெரும் புள்ளிகள் தங்களுக்குள் இருக்கும் அதிகார பகையை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒன்று சேர்ந்து, தாம்பூலத் தட்டை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞன் தொட்டது தீட்டாகிவிட்டது எனக் கூறி ஊர்க் கூட்டம் போட்டு நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுகிறார்கள்.
அதே பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக விடுதலைக்காக போராடக் கூடிய அரசியல் இயக்கம், அந்த ஊர்க் கூட்டத்திற்கு நம் மக்கள் யாரும் போக வேண்டாம்.  சட்டப்படி இந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்வோம் எனக் கூறி பட்டியல் சமூக மக்கள் பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.இதை அறிந்த மாற்று சமூகத்தினர் தாம்பூல தட்டை தொட்டு விபூதி எடுத்த அந்த இளைஞரை கொலை செய்து விடுகிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை..” என்றார்.இத்திரைப்படம் வரும் நவம்பர் 17-ம் தேதி வெளியாகிறது.