சைரன் – திரைவிமர்சனம்

கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் நாயகன் ஜெயம்ரவி, 14 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து வீட்டுக்கு வருகிறார். பரோல் நாட்களில் ஜெயம்ரவியுடன் கூடவே இருந்து கண்காணிக்கும் காவலராக யோகிபாபு வருகிறார். ஜெயம்ரவி பரோலில் வந்த நாட்களில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்வது ஜெயம்ரவிதான் என்று காவலதிகாரி கீர்த்திசுரேஷ் சந்தேகப்படுகிறார். நான் செய்யவில்லை என்கிறார் ஜெயம்ரவி.

உண்மை என்ன? என்பதைச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம் சைரன்.

இதுவரை பார்த்திராத சால்ட் அண்ட் பெப்பர் லுக் என்று சொல்லப்படும் நரைத்த தாடி மீசையுடன் வருகிறார் ஜெயம்ரவி.அந்தத் தோற்றமே ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது.இளமைத் தோற்றத்தில் துடிப்பையும் நடுத்தர வயதுக்கான பொறுப்பையும் தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

ஆம்புலன்ஸ் எனப்படும் அவசர ஊர்தி ஓட்டுநராக இருந்து, நானே எமனைத் துரத்துறேன் நீங்க ஏன் என்னைத் துரத்துறீங்க? என்று அவர் பேசும் வசனம் சமுதாய அக்கறையையும், சாதி சம்பந்தமாகப் பேசும் வசனங்கள் சமுதாய மாற்றத்திற்கானவையாகவும் இருப்பது சிறப்பு.

காவலதிகாரியாக நடித்திருக்கும் கீர்த்திசுரேஷ், அந்த வேடத்தில் தன்னை மிகச் சரியாகப் பொருத்திக் கொள்ள முயன்றிருக்கிறார்.

ஜெயம்ரவியின் காதல்மனைவியாக வரும் அனுபமாபரமேஸ்வரனுக்கு வித்தியாசமான வேடம்.அதனால் குறைவான நேரமே வந்தாலும் மனதில் நிறைகிறார்.

ஜெயம்ரவியின் அம்மாவாக துளசி, தங்கையாக சாந்தினி, மகளாக யுவினாபர்வதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏனோதானோவென இல்லாமல் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இறுக்கமாகப் போகும் படத்தை இலகுவாக்க யோகிபாபு பயன்பட்டிருக்கிறார்.அவர் வரும் காட்சிகளில் சிரிப்புமழை.

சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், அஜய் உள்ளிட்டோரும் நன்று. இதுவரை சமுத்திரக்கனி மீது இருந்த பிம்பத்துக்கு நேரெதிரான வேடமும் வசனங்களும் இருக்கின்றன. இதற்கும் அவர் பொருத்தமாக இருக்கிறார்.

பெரும்பாலும் இரவிலேயே நடக்கும் காட்சிகள் என்றாலும் அவற்றில் தெளிவும் நேர்த்தியும் இருக்கின்றன.அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.

ஜீ.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்டமாதிரி இருந்தாலும் சுவையாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் பலமூட்டியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஆண்டனி பாக்யராஜ், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் பேசும் அழுத்தமான கதையை எடுத்துக் கொண்டு,அதற்கு 14 நாட்கள் எனும் கால அளவைக் கொண்டு திரைக்கதை அமைத்து வேகம் கூட்டியிருக்கிறார். பழைய பழிவாங்கல் என்றாலும் காட்சிகளில் புதுமை புகுத்தி,அதற்குள் அப்பா மகள் பாசம், அளவான நகைச்சுவை ஆகியனவற்றைச் சரியாகக் கலந்து விறுவிறுப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

சைரன் தியேட்டர்களில் சத்தமாகவே கேட்கும்.